என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒரு மனிதர்!
சனி, 29 டிசம்பர் 2007 (11:29 IST)
(அர்ஜென்டீன சிறுகதை) ஆசிரியர் : ஃபெர்னான்டோ சோரென்டினோ
webdunia photo
WD
(ஃபெர்னான்டோ சோரென்டினோ இவர் அர்ஜென்டீனாவை சேர்ந்த இலக்கிய படைப்பாளி. இவர் அர்ஜென்டினா தலை நகர் பியூனஸ் அய்ரஸில் 1942ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிறந்தார். கடந்த 32 ஆண்டுகளாக இவர் கதைகள், கட்டுரைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியங்கள் ஆகியவற்றை படைத்து வருகிறார். 6 சிறு கதைத் தொகுப்புகள் இது வரை வெளி வந்துள்ளன. ஒரே ஒரு குறு நாவல் 1979 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. மனிதர்களின் விசித்திரமான் பகுதிகளை நகைச்சுவையுடனும் அவலச் சுவையுடனும் வெளிப்படுத்துவதில் இவரது கதைகள் எளிமைபோல் தோற்றம் அளித்தாலும் அகழ்ந்தாய்ந்து பார்த்தால் மனித இருப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவை. அரசு அதிகாரிகள், விளம்பர மாடல்கள். வேன்டுமென்றே புரியாமல் எழுதும் கவிஞர்கள், விளம்பரம் தேடும் போலிகள், போலிப்பகட்டு மனிதர்கள் என்று இவரது நையாண்டிக்கு இலக்காகும் மனித உலகம் சிந்தனைக்குரியவை. இவரது கதைகள் பல ஆங்கிலம், போர்ச்சுகீஸ், இத்தாலியன், ஜெமன், பிரஞ்சு மற்றும் தமிழ் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் கதை ஸ்பானிய மொழியிலிருந்து கிளார்க்.எம்.ஸ்லாட்சூ என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழாக்கம்).
என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒரு மனிதர் இருக்கிறார். அவர் என் தலையில் குடையால் அடிக்கத் துவங்கி இப்போது 5 ஆண்டுகள் ஆகிறது. முதலில் என்னால் அதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இப்போது எனக்கு அது பழகிவிட்டது.
அவரது பெயர் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு சராசரி தோற்றமுடையவர் என்பதை நான் அறிவேன். அவர் சாம்பல் நிற உடை அணிந்திருந்தார். அவருக்கு நரைக்கும் கன்னப்பொட்டுகள். அவருக்கு சராசரி முகம். ஒரு நாள் கொடுமையான வெயில் நேர காலையில் அவரை சந்தித்தேன். பலெர்மோ பூங்காவில் நான் ஒரு மர நிழல் அடர்ந்த பெஞ்சில் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் தலையில் ஏதோ ஒன்று படுவதை உணர்ந்தேன். அந்த மனிதர்தான், நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேனே அதே மனிதர்தான், அதாவது என் தலையில் தொடர்ந்து அடித்துக் கொன்டிருக்கும் மனிதர், எந்திரத்தனமாகவும், வீறமைதியுடனும் குடையால் என் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் அதே மனிதர்தான்.
அப்போது கடும் சினம் நிரம்ப நான் திரும்பினேன்: அவர் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஏதாவது பைத்தியம் கிய்த்தியம் பிடித்திருக்கிறதா என்று வினவினேன்: ஆனால் நான் கேட்டது அவருக்கு கேட்ட மாதிரி தெரியவில்லை. பிறகு காவலதிகாரியை அழைப்பேன் என்று நான் அச்சுறுத்தினேன். கலங்காத அவர், ஒரு வெள்ளரிப்பிஞ்சின் அமைதியுடன் தனது வேலையில் கவனமாக இருந்தார். ஒரு சில தீர்மானமற்ற கணங்களுக்கு பிறகு, அவர் தனது பழக்கத்தை மாற்றும் எண்ணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எனும்போது, நான் எழுந்து நின்று அவரது மூக்கில் ஒரு குத்து விட்டேன். அந்த மனிதர் கீழே விழுந்தார், மேலும் சப்தமே கேட்காத சிறு முனகலை வெளிப்படுத்தினார்.
அவர் உடனேயே பெரும் முயற்சியுடன் சுதாரித்து எழுந்து நின்றார், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் குடையால் எனது தலையில் மீண்டும் அடிக்கத் தொடங்கினார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது, அந்த தருணத்தில் அவருக்காக வருந்தினேன். அவ்வளவு கடுமையாக அவரைத் தாக்கியதற்காக கழிவிரக்கம் கொண்டேன். அப்படி ஒன்றும் அவர் என்னை குண்டாந்தடி அடி அடித்து விடவில்லை. அவர் சும்மா மெதுவே என் தலையில் குடையால் சிறு தட்டுத்தான் தட்டிக் கொண்டிருந்தார், இதனால் வலி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் தட்டுவது தீவிரமாக என்னை தொந்தரவு செய்தது என்பது உண்மையே. நம் எல்லோருக்கும் தெரியும், நம் நெற்றியில் ஒரு ஈ உட்கார்ந்தால் அதனால் நமக்கு வலி எதுவும் ஏற்படாது, ஆனால் ஒரு விதமான எரிச்சல் ஏற்படும். ஆனால் என் தலையில் அவ்வப்போதும், சீராகவும் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த குடையும் ஒரு மிகப்பெரிய அளவிலான ஈதான்.
ஒரு பைத்தியக்காரனிடம் சிக்கியுள்ளோம் என்ற முடிவில் திருப்தியடைந்த நான் தப்பிக்க முயற்சி செய்தேன். அதனால் நான் ஓடத் துவங்கினேன் (இந்த இடத்தில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன், என்னைப்போல் வேகமாக ஒருவரும் ஓட முடியாது. அவரும் என்னைப்பின் தொடர்ந்து என் தலையில் ஒரு அடி கொடுக்க விரயமாக ஓடி வந்தார். அந்த மனிதருக்கு மூச்சுத் திணறியது. தஸ் புஸ் என்று அவருக்கு இரைக்கத் தொடங்கியது. இதுபோன்ற ஒரு வேகத்தில் நாம் அவரை ஓடச் செய்தால் அங்கேயே அந்த மனிதர் இறந்து விழுவார் என்பது உறுதி.
அதனால் நான் நடக்கத் துவங்கினேன். நான் அவரைப் பார்த்தேன். அவரது முகத்தில் நன்றியுணர்ச்சியோ கோபமோ எதுவும் தென் படவில்லை. தொடர்ந்து குடையால் என் தலையில் தட்டிக் கொண்டுதான் இருந்தார். நான் காவல் நிலையத்திற்கு சென்று "சார்! இந்த மனிதர் என் தலையில் குடையால் அடிக்கிறார்," என்று புகார் அளிக்கலாமா என்று கூட யோசித்தேன். இது போன்ற விந்தையான புகாரை எதிர்பார்க்காத அந்த அதிகாரி என்ன செய்வார், என் மீது சந்தேகம் கொண்டு கேள்விக்கணைகளை தொடுப்பார், ஏன் என்னை சந்தேகத்தின் பேரில் கைது செய்தாலும் செய்யலாம்.
எனவே வீட்டுக்கு திரும்பி விடுவது உசிதம் என்று நினைத்தேன். 67ம் எண் பேருந்தை பிடித்தேன். தொடர்ந்து என் தலையில் குடையால் அடித்துக் கொண்டிருந்த அந்த மனிதரும் பேருந்தில் என் இருக்கைக்கு பின்னால் நின்று கொண்டு இடது கையால் பேருந்து கம்பியை பிடித்துக் கொண்டு வலது கையில் உள்ள குடையால் உட்கார்ந்திருந்த என் தலை மீது தட்டிக் கொண்டே வந்தார். முதலில் பயணிகள் இந்த நிகழ்வைப் பார்த்து வெட்கி ஒதுங்குகிற புன்னகைகளை பறிமாறிக் கொண்டனர். பேருந்து ஓட்டுனர் அவரது முன்னால் உள்ள கண்ணாடி வழியாக எங்களை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பேருந்து பிரயாணமே பெரும் சிருப்புகளை ஏற்படுத்த துவங்கியது, தீர்க்க முடியாத பெரும் சிரிப்பாக பேருந்து மாறிப்போனது. தொடர்ந்து என் தலையில் குடையால் தட்டுகள் விழுந்து கொண்டிருந்த போது நான் அல்ல நாங்கள் பசிபிகோ பாலத்தில் இறங்கினோம். சாந்தா ஃபே தெருவில் நடந்தோம். எல்லோரும் எங்களை முட்டாள் தனமாக பார்த்த படியே சென்றனர். எனக்கு அவர்களிடம் கத்தும் தருணம் ஏற்பட்டது, என்ன பார்க்கிறீர்கள் முட்டாள்களே, ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் தலையில் குடையால் அடிப்பதை நீங்கள் பார்த்ததே இல்லை? ஆனால் அதே சமயத்தில் எனக்கு தோன்றியது, இது போன்ற காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. பிறகு எங்களுக்கு பின்னால் 5 அல்லது 6 சிறுவர்கள் துரத்தினார்கள், அவர்கள் பித்தேறியவர்களாக கூச்சலிட்டபடியே துரத்தினார்கள்.
ஆனால் நான் ஒரு திட்டம் வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்தவுடன் அந்த மனிதர் முகத்திலடித்தாற்போல் கதவை அடித்து சாத்த வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் நான் என்ன செய்வேன் என்பதை முன் கூட்டியே அறிந்திருப்பார் போலும்... கதவு பிடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட அவர் என்னைத்தள்ளியபடியே என்னுடன் வீடினுள் நுழைந்தார்.
அப்போது முதல் அந்த மனிதர் தனது குடையால் என் தலையை தட்டிக் கொண்டேயிருக்கிறார். அவர் தூங்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை. அவருடைய ஒரே நடவடிக்கை என் தலையில் குடையால் அடிப்பது மட்டுமே. நான் எது செய்தாலும் அருகில் இருந்தார். என்னுடைய அந்தரங்கமான செய்கைகளின்போதும் அவர் என்னுடனே இருந்தார். அவரது அடிகள் என்னை இரவு முழுதும் தூங்கவிடாமல் செய்துள்ளது என்று ஆரம்பத்தில் நான் நினைத்தேன், ஆனால் இப்போது அந்த அடிகள் இல்லாமல் என்னால் தூங்க முடியாது என்றே தோன்றுகிறது.
இப்போதும் எப்போதும் எங்களிடையே உறவுகள் எப்போதும் நல்ல முறையில் இருந்ததில்லை. நிறைய தருணங்களின் அவரது இந்த நடவடிக்கை ஏன் என்று பல்வேறு குரல் ஏற்றத்தாழ்வுகளில் கேட்டிருக்கிறேன். ஆனால் ஊஹூம் எந்த வித பிரயோஜனமும் இல்லை. ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் தொடர்ந்து என் தலையில் குடையால் அடித்தவண்ணமே இருந்தார். நிறைய முறை குத்துகளுடனும்,உதைகளுடனும்- கடவுள் மன்னிப்பாராக- குடையால் அடித்தும் அவர் இந்த காரியத்தை செய்ய அனுமதித்தேன். அவர் அந்த அடிகளை ஏதோ அவரது வேலையில் ஒரு கடமை போல் ஏற்றுக் கொண்டார். இதுதான் அவரது ஆளுமையின் அரும்புதிரான அம்சம்: அதாவது தனது பணியில் அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கூடிய முழுதும் பகைமையற்ற ஒரு தன்மை. ஏதோ உயர் அதிகாரிக்கு அடிபணியும் ஒரு ரகசிய திட்டத்தை அவர் செய்து கொண்டிருப்பதான உறுதி.
உடல் ரீதியான தேவைகள் அவருக்கு இல்லையென்றாலும், நான் அவரை அடிக்கும்போது அவருக்கு வலி ஏற்படுகிறது என்று எனக்கு தெரிகிறது. அவர் பலவீனமானவர் என்று எனக்கு தெரியும். அவருக்கு மரணம் உண்டு என்பதும் எனக்கு தெரியும். மேலும் ஒரே ஒரு துப்பாக்கி குண்டு மூலம் நான் அவரிடமிருந்து விடுபடுவேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அந்த தோட்டா என்னை கொல்வது சிறந்ததா அல்லது அவரை கொல்வது சிறந்ததா என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை. நாங்கள் இருவருமே இறந்த பிறகும் கூட அவர் என்னை தொடர்ந்து தலியில் குடையால் அடிக்கமாட்டார் என்பது கூட எனக்கு தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இந்த தர்க்க முறையில் அர்த்தமில்லை; நான் தற்கொலை செய்வது அல்லது அவரைக் கொலைசெய்வது என்பதற்கு துணிய மாட்டேன் என்று புரிந்து கொண்டேன்.
மாறாக சமீப காலங்களில் அந்த அடிகள் இல்லாமல் நான் உயிர் வாழ முடியாது என்ற புரிதலுக்கு வந்துள்ளேன். இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு உறுதியான தீமை முன்னறிகுறிக்கு ஆட்படுகிறேன். ஒரு புதிய கவலை என் ஆன்மாவை தின்று கொண்டிருக்கிறது: இந்த மனிதர், அதாவது அவர் எனக்கு அதிகமாக தேவைப்படும் வேளையில், என்னைப்பிரிவார், நான் நன்றாக தூங்குவதற்கு உதவி புரிந்த அந்த குடை அடிகளை நான் ஒரு போதும் உணரமுடியாது போய்விடும் என்ற சிந்தனையிலிருந்து இந்த கவலை முளைத்தது.