பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து
வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது
நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம்
கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப்
பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.
பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.
சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.
இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத்தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.
இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின்
துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.
இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.
இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.
இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.
இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார்.
நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.
இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.
மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.
எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்
துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.
தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.
முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.
இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.
அகமத் ஷாகி, காந்தி 1931-ல் லண்டன் வட்டமேசை மாநாட்டிற்கு செல்லும் வழியில் எகிப்திற்கு வந்தபோது ஒரு அற்புதமான நீண்ட கவிதையை இயற்றியுள்ளார். இதில் காந்தியை அவரது தன்னலமற்ற தொண்டிற்காகவும், மனித உரிமைகளை காப்பதற்காக போராடுவதற்காகவும் நபிகள் நாயகத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.