வெற்றி, தோல்வியை யாராலும் சமமாக எடுத்துக் கொள்ள முடியாது - தமன்னா பேட்டி

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (15:23 IST)
வெற்றி, தோல்வி, குடும்பம், நடிகையானவிதம் என்று அனைத்தையும் மறந்து திறந்து பேசினார் தமன்னா. அவரது உணர்ச்சிகரமான அந்த பேட்டி உங்களுக்காக...


 
 
வெற்றிகரமான நடிகையாகியிருக்கிறீர்கள். இப்போது உங்கள் பழைய வாழ்க்கையை பார்க்கும் போது எப்படி இருக்கிறது?
 
இவ்வளவு உயரத்துக்கு வந்த நான் சிறு வயதில் இருந்து பயணப்பட்டு வந்த தூரங்களை நினைவுப்படுத்தி பார்க்கும் போது வியந்து போகிறேன். எனது தந்தை கப்பலில் வேலை செய்ததால் அதிக நாட்களை கடலிலேயே கழித்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு நகை வியாபாரத்தில் இறங்கினார். அம்மாவும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து நான் பிறந்ததும் எனக்காக வேலையை விட்டுவிட்டார். அவருடைய தியாகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது.
 
நடிப்பில் எப்போது ஆர்வம் ஏற்பட்டது?
 
பள்ளியில் படித்தபோது நாடகமொன்றில் நடித்தேன். அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு நாடக குழுவில் சேர்ந்தேன்.
 
நடிப்புக்காக சின்ன வயதில் என்ன செய்தீர்கள்?
 
நடிப்பவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து யோகா கற்க ஆரம்பித்தேன். நான் படித்த பள்ளிக்கு நடிகை ராணிமுகர்ஜி உள்பட நிறைய திரையுலக பிரபலங்கள் வந்தனர். அவர்களை பார்த்து நடிப்பில் எனக்கு மேலும் தீவிரமான பற்று ஏற்பட்டது.
 
வீட்டில் இதற்கு ஆதரவு இருந்ததா?
 
எனது அம்மாவும் நீ ஒரு நாள் மிஸ் இந்தியா ஆவாய் என்று பேசி வந்தார். அது எனக்கு உற்சாகத்தை தந்தது.
 
சினிமாவில் ஆரம்பகட்டம் எப்படி இருந்தது?
 
நான் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்து வந்த ஹேப்பி டேஸ் வெற்றிகரமாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது.
 
வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
 
சினிமாவில் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் சொல்வதை கேட்டு இருக்கிறேன். அது யாராலும் முடியாது. வெற்றியில் சந்தோஷப்படுவதும் தோல்வியில் கவலைப்படுவதும் மனிதர்களுக்கு உள்ள இயற்கையான குணம். நான் நடித்த படம் தோல்வி அடைந்தால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும். எனது படங்கள் தோல்வி அடையும் போதெல்லாம் நான் துவண்டுபோகிறேன்.
 
தோல்வியில் துவளும் நீங்கள் வெற்றியில் கர்வம் கொள்வதுண்டா?
 
வெற்றி வரும்போது பலருக்கு கர்வம் ஏற்படும். ஆனால் அனுபவம் வரவர அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்