பாலியல் பலாத்கார பெண் வேடத்தில் நடித்தபோது அழுதுவிட்டேன் - நடிகை தாப்ஸி பேட்டி

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (15:06 IST)
நீரஜ் பாண்டேயின் பேபி திரைப்படத்துக்குப் பிறகு தாப்ஸி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம், பிங்க். உடன் நடித்திருப்பவர் அமிதாப்பச்சன். பிங்கில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்பட பெண்ணாக தாப்ஸி நடித்துள்ளார்.


 


அது குறித்த தனது அனுபவத்தையும், பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளையும் குறித்து தாப்ஸி அளித்த பேட்டி...
 
பேபி, பிங்க் என்று வித்தியாசமான படங்களில் நடிக்கிறீர்களே?
 
ஆமாம். இந்தப் படங்களுக்குப் பிறகு என்னை வெறும் கிளாமர் நடிகையாக மட்டும் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். 
 
பிங்க் படம் பற்றி கூறுங்கள்?
 
இதில் டெல்லியைச் சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது ஒரு பக்கம் எளிதாகவும், இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருந்தது.
 
எப்படி...?
 
நான் மும்பை வரும் முன் டெல்லியில்தான் வசித்து வந்தேன். அதனால் ஒரு டெல்லி பெண்ணாக மாறுவது எனக்கு எளிதாக இருந்தது. நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் மனதை நொறுக்கக் கூடியது. அதில் நடித்ததில் என்னுடைய இதயம் உடைந்துவிட்டது.
 
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 
நள்ளிரவில் ஒரு பெண் எப்போது தனியாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் இன்றுள்ள நிலைமை அப்படியா இருக்கிறது? நிர்பயாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்பவத்தை எப்படி மறக்க முடியும். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. மானபங்கம் செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். அதே ஆசை எனக்கும் இருக்கிறது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
 
பிங்க் படத்தில் நடித்த போது எப்படி உணர்ந்தீர்கள்?
 
பிங்க் படத்தில் அதில் நடித்தபோது சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிந்தது. படப்பிடிப்பில் அழுது விட்டேன். படக்குழுவினர் என்னிடம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்கள்.
 
பிங்க் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
 
பிங்க் படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களை குறைப்பதற்கான தூண்டுகோலாக இந்த படம் இருக்கும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்