நெஞ்சம் மறப்பதில்லை ஒரு பாதிப்பை உருவாக்கும் - ரெஜினா பேட்டி

வியாழன், 30 ஜூன் 2016 (15:29 IST)
கேடி பில்லா கில்லாடி ரங்கா படம்தான் இன்றும் நடிகை ரெஜினாவின் முகவரியாக உள்ளது.


 


அதனை செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை மாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, அப்படம் குறித்து ரெஜினா பகிரும் தகவல்கள். நெஞ்சம் மறப்பதில்லை குறித்தும், இயக்குனர் செல்வராகவன் குறித்தும் பேச ரெஜினாவுக்கு நிறைய இருக்கிறது.
 
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் உங்க வேடம் என்ன?
 
பணக்கார வீட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளும் மரியம் என்ற பெண்ணாக நடித்திருக்கிறேன். கொஞ்சம் சிக்கலான குணாம்சம் கொண்ட கதாபாத்திரம் இது.
 
விளக்கமாக சொல்ல முடியுமா?
 
செல்வராகவன் சாரின் நாயகிகள் எப்போதும் தனித்தன்மைமிக்கவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சமமான முக்கியத்துவம் தந்து உருவாக்கியிருக்கிறார். அவருடையது வெறும் நாயக வழிபாடு மட்டும் கிடையாது. 
 
செல்வராகவனின் படங்கள் சிலநேரம் புரிந்து கொள்ள முடியாமல் போகிறதே?
 
அதை ஒத்துக் கொள்கிறேன். அவருடைய படமாக்கும்முறை கற்பனை செய்ய முடியாததாக இருக்கும். ஒரு காட்சியை அவர் எப்படி எழுதுகிறார், எப்படி அதனை படமாக்கப் போகிறார் என்பது முன்கூட்டியே கணிக்க முடியாததாக இருக்கும். அவருடைய பார்வையில் ஒரு ஹாரர் படத்தைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன்.
 
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உங்கள் கழுத்தில் ஜெபமாலை கிடந்ததே...?
 
ஆமாம். நான் ரொம்பவும் கட்டுப்பெட்டியான கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெண்ணாக நடித்திருக்கிறேன். அந்த போஸ்டரே அதனை சொல்லிவிடும். 
 
செல்வராகவன் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
திரையுலகில் ஒவ்வொருவரும் ஒருவர் பற்றி ஒரு அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள். செல்வராகவன் சார் படத்தில் கமிட்டானதும், முதலில் எனக்கு வந்த அறிவுரை, அவருடன் வேலை பார்ப்பது முடியாத காரியம், உடனே விலகிவிடு. ஆனால், அதற்கு நேர்மாறாக இருந்தது அவருடன் வேலை பார்த்தது. அவர் எல்லோரிடமும் ரொம்ப இனிமையாக பழகினார். 
 
ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறீர்களாமே?
 
ஆமா. ரோப்பில் தொங்கியும் நடித்திருக்கிறேன். ஆனால், என்னைவிட நந்திதாவுக்குதான் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு பயங்கர சண்டைக் காட்சியும் அவருக்கு இருக்கிறது. நெஞ்சம் மறப்பதில்லை நிச்சயம் ஒரு பாதிப்பை உருவாக்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்