*மாநாடு டைம் லூப்பை முடிவு செய்தது விஜய் - சூர்யா தான் - வெங்கட்பிரபு!
புதன், 22 டிசம்பர் 2021 (15:22 IST)
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது, “இந்த படத்தின் கதையை சொன்னபோது உடனே ஒப்புக் கொண்ட சிம்பு, இந்த படத்தை பிரஷ்ஷா புது டீமோட வொர்க் பண்ணலாம்ன்னு சொன்னார்.. இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம்.
இடையில் கோவிட் காரணமாக இந்த படத்தை அப்படியே வைத்துவிட்டு, இதே சிம்பு, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியை வைத்து சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்தேன்.. சிம்புவும் அதற்கு ஓகே சொன்னார்.. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அந்த கதை பிடித்திருந்தாலும், மாநாடு படத்திலிருந்து நான் டைவர்ட் ஆக வேண்டாம் முதலில் அந்த படத்தை முடிப்போம் என உறுதியாக நின்றார்
இந்த படம் 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான். சிக்கலான இந்த கதையை எல்லோருமே எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீணுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தி முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் அந்த பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது என கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.
ப்ளூ சட்டை மாறனை தவிர, எல்லோருமே படம் நன்றாக இருக்கிறது என சொல்லிட்டாங்க அவர் பெயரை வேற, என்னை இந்த இடத்தில் பயன்படுத்த வச்சுட்டாங்க.. ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி. இன்னைக்கு அவரோட கம்பெனிஇல நான் படம் இயக்கியிருக்கிறேன்.. அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்” என்று கூறினார்.