பன்ச் டயலாக் பேசுவதில் விருப்பமில்லை - விஷால் பேட்டி

புதன், 29 அக்டோபர் 2014 (15:07 IST)
பூஜை வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு திருச்சியில் ரசிகர்களை சந்திக்க வந்திருந்தார் விஷால். பூஜை ஓடும் திரையரங்குகளில் ரசிகர்களை நேரடியாக சந்திப்பதற்கு முன் நிருபர்களுக்கு பேட்டிளியத்தார். படத்தின் இயக்குனர் ஹரியும் உடனிருந்தார்.
பூஜை எப்படி போகிறது?
 
ஹரி இயக்கத்தில் நான் நடித்துள்ள பூஜை தமிழகம், ஆந்திரா உள்பட 1200 திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பூஜை என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகும்.
 
திருச்சிக்கு ஏன் திடீர் விசிட்?
 
எனது தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஸ்டுடியோவில் அமர்ந்து நன்றி சொல்ல எனக்கு விருப்பமில்லை. நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஊர் ஊராக சென்று சந்தித்து வருகிறேன்.
 
மீண்டும் இதுபோன்ற படத்தில் நடிப்பூர்களா?
 
இது குடும்ப கதையம்சம் கொண்ட படம். சென்டிமெண்ட், காமெடி, சண்டை, லவ் என்று எல்லாம் இருப்பதால் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து ரசிக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
 
படத்தில் பன்ச் டயலாக் எல்லாம் இல்லையே?
 
பன்ச் டயலாக் பேசுவதில் எனக்கு விருப்பம் கிடையாது.
நடிகர் சங்கத்தை நீங்கள் கைப்பற்றப் போவதாக கூறுகிறார்களே?
 
அப்படியெல்லாம் எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. சங்கத்தை சிறப்பான வழியில் கொண்டு செல்ல அனைவரும் முன் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
 
கத்தியுடன் உங்கள் படத்தை வெளியிட்டிருக்கிறீர்களே... விஜய்யுடன் போட்டியா?
 
எனக்கு யாருடனும் போட்டியில்லை. பூஜை தொடங்குவதற்கு முன்பே தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டுதான் ஆரம்பித்தோம். கத்தி தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரியாது. எல்லாம் தற்செயலாக நடந்தது.
 
ஏன் இதுவரை சரித்திரப் படங்களில் நடிக்கவில்லை?
 
எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனக்கு சாதாரணமான படங்களிலேயே வசனம் பேசுவது சிரமமாக இருக்கும். சரித்திரப் படங்களில் வசனம் பேசுவது சிரமம். 
 
லட்சுமிமேனன் உங்களுடன் மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாரே?
 
அப்படி அவர் கூறியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. லட்சுமி மேனன் திறமையான நடிகை. மற்றவர்களை ஊக்கப்படுத்தும் குணம் உடையவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்