ரஜினி கண்டிப்பாக வாழ்த்து சொல்வார் - கமல்ஹாசன் பேட்டி

திங்கள், 27 ஜனவரி 2014 (09:38 IST)
இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் கமல்hசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை கமல் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி.
FILE

பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்...?

முன்பு சொன்ன அதே உணர்வுகள்தான் இப்போதும். இந்த விருதுக்கு தகுதியானவர்கள் இன்னும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது என் பெயரைப் பார்ப்பதில் பெருமை. எனக்கு வித்தை கற்றுக் கொடுத்தவர்கள், வாய்ப்பு கொடுத்து கைப்பிடித்து அழைத்து வந்தவர்கள்கூட இந்த விருதைப் பெறாமல் போய் சேர்ந்துவிட்டார்கள். செல்வங்கள் மட்டுமில்லை திறமைகளும் கொழிக்கும் நாடு இது. இனி செய்யப் போகும் வேலைகளுக்கு ஊக்கியாக இந்த விருது இருக்கும். இந்த பெருமைக்கு தகுதியுள்ளவனாக இனிதான் ஆக வேண்டும்.

விருது என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. உங்கள் விஷயத்தில் எப்படி...?

FILE

இந்த நாட்டில் மக்கள் கொடுக்கும் அங்கீகாரம்தான் முதன்மையானது. இருப்பதற்கும், இனி தொடர்ந்து பணி செய்வதற்கும் தகுதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த விருது அடுத்தகட்டம்தான். எல்லா விருதும் அப்படிதான்.

25 வருடங்களாக கிரிக்கெட்டில் இருந்த சச்சினுக்கு பாரத ரத்னா விருது தந்திருக்கிறார்கள். 50 வருடங்களாக மக்களின் ரசனைக்குரியவராக இருக்கிறீர்கள். இது வருத்தமான விஷயம்தானே...?

இது சுதந்திர போராட்டம் மாதிரி. இதற்கெல்லாம் சம்பளம் கேட்கக் கூடாது. கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். கொடுக்கவில்லையென்றாலும் கவலையில்லை. பாரத ரத்னா விருதுக்குரிய தகுதிகளும் வந்து சேரும்.
FILE

இந்த விருதை யாருக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளீர்கள்...?

கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், குடும்பத்தாருக்கும். சண்முகம் அண்ணாச்சி, பாலசந்தர் முக்கியமானவர்கள்.

சென்ற வருடம் இதே இடத்தில் விஸ்வரூபம் விவகாரத்துக்காக நடந்த சந்திப்புகள் நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தன. இன்று உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அன்று ஏற்பட்ட காயத்துக்கு களிம்பாக இந்த விருதை எடுத்துக் கொள்ளலாமா?

எனக்கு வரும் இகழ்வுகளை எப்போதும் தனிச் சொத்தாக எடுத்துக் கொள்வேன். புகழ் வரும்போது பங்கிட்டு கொள்வேன். நீங்கள் சொல்கிற அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். காயங்களுக்கான மருந்தாக எடுத்துக் கொண்டால் அது கொடுக்கல் வாங்கல் என்றாகிவிடும்.
FILE

ஆஸ்கர் விருது குறித்து...?

இந்த ஊரில் வியாபாரம் செய்ய ஐ.எஸ்.ஐ. போதும். வெளிநாட்டில் வேலை செய்ய போகும் போது யு.எஸ்.ஐ. தேவைப்படும். அவர்களுக்கு நானும், எனக்கு அவர்களும் தேவைப்படும் போது எல்லாமும் சாத்தியமாகும்.

கலையுலகில் சாதித்த அனைவரும் வேறு எதையாவது தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தேடிக் கொண்டிருக்கிற விஷயம் எது?

நிறைவு என்பது ரசிகர்களுக்குதான் வர வேண்டும். பசி மாதிரிதான் அதுவும். பூர்த்தி அடைந்த பிறகும் தேடுதலை நிறுத்திவிட முடியாது. தொழில்நுட்பங்களும், சினிமா நுட்பங்களும் வேகமாக வளர்ந்து வருகிற இந்த நேரத்தில் போதும் என்கிற மனம் பொன் செய்யாது.

65 ஆம் ஆண்டு குடியரசு தினத்தில் உங்கள் பார்வையில் இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாக கருதுகிறீர்களா?

குடியரசை எட்டி விட்டதற்கான எல்லா அடையாளங்களும், எட்டவில்லை என்பதற்கான எல்லா சான்றுகளும் உள்ளன. முழு வெற்றி தென்படவில்லை. குறிப்பாக ஜாதி இன்னும் ஒழிந்தபாடில்லையே. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாப்பாக்களுக்கு கொள்ளு பேத்தியே பிறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிக்காக ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. குடியரசுக்கு 65 வயது என்பதை 6.5 வயது என்று எடுத்துக் கொள்ளலாம்.
FILE

அரசியலில் ஈடுபடுவீர்களா?

5 வருடங்களுக்கொருமுறை அரசியலில் இருக்கிறேன். கை விரலில் மட்டும் கறை இருக்கட்டும். கை முழுவதும் வேண்டாமே.

விஸ்வரூபம் 2, மருதநாயம்...?

விஸ்வரூபம் 2 படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இசைக்கோர்ப்பு, எடிட்டிங் என பெரும்பான்மையான பணிகள் இனிதான் நடக்க உள்ளன. மருதநாயகம் செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் வாழ்த்தினாரா...?

இன்னும் வாழ்த்து சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக வாழ்த்து சொல்வார். நிதானமாக வந்து வாழ்த்தலாம் என்று முடிவு செய்திருப்பார்.
FILE

சுயசரிதை எழுதும் எண்ணமுண்டா?

நிஜம் பேசுகிறோம் என்ற தைரியத்தில் எல்லோரையும் புண்படுத்தி விடக்கூடாது. என்னைப் பற்றி என்னென்ன சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கிறதோ, அதுவெல்லாம் அப்படியே இருக்கட்டும்.

ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்த விருது எனக்கு ஊக்கிதான். இந்த உயரம் போதும் என்று நானும் சோர்ந்து விடக்கூடாது. ரசிகர்களும் சோர்ந்து விடக்கூடாது. மொழி, இனம் கடந்து என்னை வாரி அணைத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

வெப்துனியாவைப் படிக்கவும்