அடப்பங்குளம் அதிரடிப்படை முகாமை அகற்றக் கோரி போராட்டம்

திங்கள், 21 செப்டம்பர் 2015 (13:01 IST)
வவுனியா அடப்பங்குளம் அதிரடிப்படை முகாமை அகற்றக்கோரி அந்தப் பகுதி மக்கள்மக்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
வவுனியா செட்டிகுளத்திற்கு அருகில் அடப்பங்குளத்தில் உள்ள அதிரடிப்படை முகாம் காணியின் முட்கம்பி வேலியில் படையினரால் பாய்ச்சப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற மின்சாரம் தாக்கியதில் 55 வயதுடைய கந்தசாமி ராஜேஸ்வர் என்ற பெண் மரணமானார்.
 
அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ள காணிக்கு, அடுத்ததாக உள்ள காணியில் வசித்து வருகின்ற இந்தப் பெண்மணி,இரு காணிகளை பிரிக்கும் முட்கம்பி வேலியின் மறுபக்கத்தில் இருக்கும் வேப்பமரக் கன்றில், வேப்பங்கொழுந்தைப் பறிப்பதற்காக வேலியின் முட்கம்பியில் சாய்ந்தபோது, அந்தக் கம்பியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த சம்பவத்தையடுத்து, அந்த அதிரடிப்படை முகாமை அகற்ற வேண்டும் எனக்கோரி அடப்பங்குளம் உள்ளிட்ட செட்டிகுளம் பிரதேச மக்கள் ஞாயிறன்று அமைதியான கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
 
மரண வீட்டிற்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிமலன் மற்றும் வடமகாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள் கையளித்துள்ளனர்.
 
அடப்பங்குளம் பகுதியில் செட்டிகுளம் பிரதான வீதியில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள், அடப்பங்குளம் அதிரடிப்படை முகாமுக்கு எதிரில் வைத்து மகஜர்களைக் கையளித்துள்ளனர்.
 
இந்தச் சம்பவத்தை அடுத்து அடப்பங்குளம் அதிடிப்படை முகாம் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்