மீள்குடியேற்றம்: அரசாங்கம் சொல்லும் அளவில் இடம் கிடைக்கவில்லை

ஞாயிறு, 21 ஜூன் 2015 (17:29 IST)
இலங்கையில் வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறுவதற்காக அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வழங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களாகின்றன. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயினும் ஆயிரத்து நூறு ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றுவதாக அறிவித்திருந்த அரசாங்கம், 638 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டிருப்பதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றம் சில காணிகளில் அரைவாசிப் பகுதி இராணுவத்தின் முட்கம்பி வேலிக்குள் இருப்பதாகவும் ஒரு பகுதி மட்டுமே மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
பவுசர் வண்டிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் காணிகளுக்குப் போய்வரக்கூடியதாக வீதிகள் அமைக்கப்படவில்லை. 
 
மீள்குடியேறியவர்களுக்கு மிகவும் அவசியமான கழிப்பறைகள்கூட இன்னும் இல்லை என்றும் மின்சாரம் போன்ற வசதிகளும் இன்னும் செய்து தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
யுஎன்எச்சிஆர், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற நிறுவனங்கள் சில உதவிகளை வழங்கியிருக்கின்ற போதிலும் கடற்கரையோரத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கென மூன்று இடங்களில் கடலை ஆழமாக்கித் தருமாறு கோரியிருந்த போதிலும் அது இன்னும் செய்து தரப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.
 
அத்துடன் இராணுவம் யுத்த காலத் தேவைக்காக அமைத்திருந்த பாரிய பாதுகாப்பு அணைகள் இன்னும் அகற்றப்படாமலிருப்பதுவும் மீள்குடியேறியுள்ள மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்