சேனல் 4 வெளியிட்ட இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகள் உண்மையானது: பரணகம அறிக்கை

வியாழன், 22 அக்டோபர் 2015 (10:08 IST)
பிரிட்டன் சேனல் 4 வெளியிட்ட, இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகள் உண்மையானது என்று 178 பக்கங்கள் கொண்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள், காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஒரு ஆணைக்குழு மகிந்த ராஜபக்ஷ அதிபராக இருந்த போது 2013 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்தார்.
 
பிரிட்டன் சேனல் 4 ஊடகவியலாளர் கெலம் மக்ரேயின் எடுத்த இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகள் உண்மையானது என்று 178 பக்கங்கள் கொண்ட பரணகம அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தக் காணொளி குறித்து முறையான நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற போது அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்துள்ளதோடு, போர்க்குற்றத்தில் ஈடுப்பட்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
 
பேருந்துகளில் இராணுவத்தால் ஏற்றிச் செல்லப்பட்ட பொதுமக்களைக் காணவில்லை என குற்றம்சாட்டப்பட்டது குறித்தும் தனியான ஒரு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பில் போர்க் குற்றங்கள் தொடர்பாக தனியான பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும். மேலும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் சாசனத்திற்கு அமைவாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆணைக்குழுவின் அறிக்கையுடன், அரசு சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி நிஸ்ஸங்க உடலகம தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது.
 
பரணகம அறிக்கை தொடர்பாக பேராசிரியர் ராமு.மணிவண்ணன், “இது வெறும் கமிட்டியின் அறிக்கைதான். இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை. எனவே இதனை நீதி கிடைத்ததாக கருதமுடியாது” என்று தனது கருத்தைத் தெரிவித்து, சர்வதேச விசாரணை என்பதே பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அவசியமான நியாயமான ஒன்றாகும் என்பதை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்