எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் போட்டியின்றித் தேர்வு

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (05:01 IST)
எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
 

 
இலங்கை நாடாளுமன்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தேசிய அரசை அமைத்துள்ளன. ஆனால், 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த அரசில் இணையவில்லை.
 
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், தங்களுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை இலங்கை அதிபர் நிராகரித்தார்.
 
இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான முறையான அறிவிப்பை, சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்தார்.
 
இதன் மூலம், கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்