ராஜபக்சேவை கண்டுபிடித்து தாருங்கள் - பொதுமக்கள் கோரிக்கை
வியாழன், 26 நவம்பர் 2015 (19:10 IST)
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷேவை கண்டுபிடித்துத் தருமாறு குருநாகல் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே, கடந்த பொதுத் தேர்தலின் மூலம் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்சேவோ, அவரது அணி நாடாளுமன்ற உறுப்பினர்களோ குருநாகல் மாவட்டத்தில் இதுவரை ஒரு பொதுமக்கள் சந்திப்பையேனும் நடத்தவில்லை.
குருநாகல் மாவட்டத்துக்கு மிக அபூர்வமாகவே வருகை தரும் மஹிந்த ராஜபக்சே, கோவில்களில் நடைபெறும் வழிபாடுகள் தவிர்த்து பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை.
எனவே மஹிந்தவுக்காக செயற்பட்ட அப்பகுதி ஒருங்கிணைப்பாளர்களை சந்திக்கும் பொதுமக்கள், தமது வாக்குகளால் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவை கண்டுபிடித்து சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அண்மைக்காலமாக வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.