ராஜபக்சே ஆட்சியின்போது ஜெயலலிதா தமிழர்களுக்காக முன்னிற்கவில்லை - இலங்கை எம்.பி. கோபம்

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:06 IST)
மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை என பிவிதுரு ஹெல உறுமய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 

 
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உதய கம்மன்பில, “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து சுயாட்சி அரசாங்கமாக்குவது, தமிழீழம் மேலும் தலைதூக்குவதற்கான நடவடிக்கையாகும். பிரபாகரனால் துப்பாக்கியைக் கொண்டு செய்யமுடியாது போனதை, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசியலால் செய்ய முற்படுகிறார்.
 
ஆனால், ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமானது. அதனை பயன்படுத்திக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முனைகிறது. இவர்களுக்குத்தான் இன்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
 
அத்தோடு, மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழர்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் பிரசாரத்தில், இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழம் அமைப்பதாகவும் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாகவும் கூறி வருகிறார்.
 
நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுவத்துவதாக சிலர் ஊடகங்கள் வாயிலாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தியது நாமல்ல. ஜனாதிபதி மைத்திரியே கட்சியை பிளவுபடுத்தினார்” என்றார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்