இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை: ஐநா. முன்னாள் தலைவர்கள் கூட்டறிக்கை
செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (16:40 IST)
இலங்கை இனப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஐநா மனித உரிமைக் கவுன்சிலை வலியுறுத்தி நிகாரகுவா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐநா பொது அவையின் முன்னாள் தலைவருமான பிராக்மன், மற்றும் மேதாபட்கர், வித்யா ஜெயின், ஃப்ரான்சஸ் ஹாரிசன்,கல்லம் மக்ரே உள்ளிட்ட 62 பேர் கையொப்பமிட்டு கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
"இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர்முடிவுக்கு வந்த பின்னரும்கூட இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கோ போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கோ இலங்கை அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் தான் ஐநா மனித உரிமைக் கவுன்சில், தானே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.
அந்தக் குழுவுக்கும் இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. அதன் பிறகே ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவந்தது" என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் அந்தக் கூட்டறிக்கை யுத்தம் முடிந்த பிறகும்கூட தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையும் வன்முறையும் தொடர்ந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறது.
தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சிங்கள மக்களுக்கு பயனளிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் பலவற்றை மேற்கொண்ட இலங்கை அரசு வடகிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவத்தைக்கூட விலக்கிக்கொள்ளவில்லை என்பதை இந்தக் கூட்டறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
*போர்க்குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை முதலானவற்றை விசாரிக்க சர்வதேச சட்டத்தைப் பயன்படுத்துதல்;
*விசாரணை அமைப்பு எத்தகையதாக இருக்கவேண்டும் எபன்பதை பாதிக்கப்பட்டோரிடம்
கலந்தாலோசித்து முடிவுசெய்தல்;
*சாட்சிகளைப் பாதுகாத்தல்;
*விசாரணைக் குழுவின் முக்கியமான பொறுப்புகளில் தகுதியான நபர்களை ஐநாவே நியமித்தல்
-உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டறிக்கை எழுப்பியுள்ளது.