சிற்றூழியர் நியமனங்களில் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

வெள்ளி, 26 ஜூன் 2015 (16:53 IST)
இலங்கையில் மத்திய கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் காலியாகவுள்ள சிற்றூழியர்கள் நியமனத்தில் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

இந்த புறக்கணிப்பு காரணமாக வடக்கு - கிழக்கு மற்றும் மலையக பகுதிகளிலுள்ள அரச கல்வி நிறுவனங்களுக்கு புதிதாக தமிழ்- முஸ்லிம் சிற்றூழியர்களை தனது அமைச்சினால் நியமிக்க முடியாமல் போயுள்ளதாக இந்திய வம்சாவளித் தமிழரான கல்வி இராஜங்க அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கீழ் உள்ள பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் கல்வியியல் கல்லூரிகளில் 1295 சிற்றூழியர்கள் பதவி காலியாக இருப்பதாக கல்வி அமைச்சினால் கண்டறிப்பட்டுள்ளது.

இது தொடர்பான நியமனங்களில் வடக்கு - கிழக்கு மற்றும் மலையகப் பகுதிக்குக்குரிய 260 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே தனது கல்வி இராஜங்க அமைச்சுக்கு வழங்கப்பட்டதாகவும் பிறகு, அந்த அனுமதி கல்வி அமைச்சினால் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வி. ராதாகிருஷ்ணன் கூறுனார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இந்த நியமனங்களைத் தானே வழங்க வேண்டும் எனத் தெரிவித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அவரது மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்கிவருவதாகவும் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டுகிறார்.

சிற்றூழியர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரசிங்கவின் கவனத்திற்கு இரு தடவைகள் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அதற்கான சாதகமான முடிவுகள் இதுவரையில் எட்டப்படவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை தொடர்பு கொண்டு அவரது பதிலை பெற முயன்றபோது அவரது தொலைபேசியில் வேறொருவர் பதில் அளித்தார்

குருநாகலையில் கட்சி கூட்டமொன்றில் கலந்து கொண்டிருப்பதால் தற்போது தொடர்புகொள்ள முடியாதிருப்பதாக அந்த தொலைபேசியில் பதிலளித்த நபரால் தெரிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்