நாளை ராஜ்கோட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதில் யார் வெல்வார்கள் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெற்ற முதல் வெற்றியின் புது தெம்போடு தோனி & கோ நிச்சயம் களமிறங்கும். மேலும், தோனி பேட்டிங்கில் மீண்டும் ஃபார்ம்-க்கு திரும்பியிருப்பது அணிக்கு மேலும் பலம் அளிக்கக்கூடிய விஷயமாகும்.
தோனி தவிர, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் உள்ளனர். ஆனால், விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் ஃபார்முக்கு திரும்பாதது கவலையளிக்கிறது. கடந்த 7 இன்னிங்ஸில் விராட் கோலி ஒன்றில் கூட அரைச்சதத்தை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் தென் ஆப்பிரிக்கா அணி எப்போதுமே தோல்வியில் துவண்டுவிடும் அணி கிடையாது. போராடும் குணத்தோடு அவர்கள் நிச்சயம் களமிறங்குவார்கள். ஹசிம் அம்லா, டி காக், டு பிளஸ்ஸி, டுமினி, டி வில்லியர்ஸ் என்ற வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். ஏனென்றால், தென் ஆப்பிரிக்க அணிக்கு 247 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். ஆனால், பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால்தான் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடிந்தது.
புவனேஷ்குமாரும், அக்ஷர் பட்டேலும் சிறப்பாக பந்துவீசினர். இதனை 3ஆவது போட்டியிலும் தொடர்வார்கள் என நம்பலாம். அதேபோல், பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி வெற்றுபெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.