யார் இந்த பல்ராஜ் யாதவ்? தோனி, சச்சின், திராவிட், ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டுமே இந்திய விளையாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் வேளையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனி நபர் படகுப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஹரியானா மாநிலத்தின் பல்ராஜ் யாதவை நாம் மறக்கமுடியுமா?
தனிநபர்ப் படகுப் போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அன்றைய தினம் நேரலையாகப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் என்னவெனில் இரண்டாவதாக வெகு வேகமாக முன்னேறிய வீரர் இந்தியர் என்பதுதான். வெள்ளி வென்ற பிறகே அவரது பெயர் பல்ராஜ் யாதவ் என்பதெல்லாம் கூட தெரியவந்தது. கிரிக்கெட் அல்லாத மற்ற விளையாட்டுகளின் நிலை இந்தியாவில் இந்த லட்சணத்தில்தான் உள்ளது.
பள்ளிச் சிறுவனாயிருந்தபோது தனது தந்தைக்கு விவசாயத்தில் உதவி புரிவதுடன் இந்தியாவின் பாரம்பரிய மிக்க சிறுவர் விளையாட்டான கில்லி தாண்டு விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டியவர்தான் இந்த பல்ராஜ் யாதவ்.
தற்போது 34 வயதாகும் இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னைத் த்யார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக அரசு எந்த உதவியையும் இவருக்குச் செய்யவில்லை, இவரே பயிற்சியாளரையும் படகையும் பின்லாந்திலிருந்து இறக்குமதி செய்தார்.
பொதுவாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கே படகோட்டி வீரர்களை இந்தியா தயார் செய்வதில்லை என்று குற்றம்சாற்றும் இவர் லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் எப்படி வெல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
படகுப் பந்தயத்திற்கான வீரர்களைத் தயார் செய்வது என்பது பெரிய செலவு வைக்கும் விவகாரம் என்று கூறும் பல்ராஜ் யாதவ் தற்போது தான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருவதால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். அரசு வேலை கிடைத்தால் சமாளிக்க முடியும் என்று கூறுகிறார்.
ஹரியானா மாநிலத்தின் குத்துச் சண்டை வீரர்கள் பல்வேறு தொடர்களில் இந்தியாவை தலை நிமிரச்செய்துள்ளனர் என்று கூறும் பல்ராஜ் யாதவ், ஹரியானா மாநிலத்தில் படகுப் போட்டிகளுக்குத் தயார் படுத்த நிறைய போட் கிளப்புகள் அவசியம் என்கிறார்.
தற்போது பல்ராஜ் யாதவ் மான்சூன் கோப்பை படகுப் போட்டிக்குத் தயார் செய்து வருகிறார். அதன் பிறகு ஆசிய படகுப் போட்டிகளுக்கும் இவர் தயாராகி வருகிறார்.
1999ஆம் ஆண்டு இந்திய கப்பற்படையில் பல்ராஜ் யாதவ் பணியாற்றினார். அங்கு கப்பல் ஓட்டியதால் தனக்கு படகு போட்டிகள் மீது ஆர்வம் பிறந்தது என்கிறார்.
இவர் படகோட்டி மட்டுமல்ல, கூடைப்பந்து, கில்லித் தாண்டு, வாலிபால் என்று இவர் ஒரு சிறந்த விளையாட்டுக் கலைஞராகவே திகழ்கிறார்.