2022-இல் கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தவறான முடிவு என்கிறார் பிஃபா தலைவர்

ஞாயிறு, 29 ஜூன் 2014 (17:12 IST)
2022 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாரில் நடத்துவது என்பது தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று உலக கால்பந்து போட்டிகளின் நிர்வாக அமைப்பான பிஃபாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
பாரம்பரியமாக ஜூன்-ஜூலை மாதங்களில் நடத்தப்படும் உலகக் கோப்பை போட்டிகளை, அந்த மாதங்களில் 50 செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் கத்தாரில் நடத்துவதற்கு பிஃபா ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
 
இந்த முடிவு தவறானதா? என்று பிஃபாவின் தலைவர் ஸெப் பிளாட்டரிடம் சுவிஸ் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது. ஆம் நிச்சயமாக என்று அதற்குப் பதிலளித்த அவர் எல்லோரும் வாழ்க்கையில் தவறு இழைத்திருக்கிறார்கள் என்று கூறினார். அதே நேரம் வளைகுடா நாடான கத்தார் 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகப் போட்டிகளை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் விமர்சனங்களை ஸெப் பிளாட்டா நிராகரித்தார்.
 
கத்தாரில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டிய அறிக்கையை பெற்றிருந்த நிலையிலும், பிஃபாவின் நிறைவேற்றுக்குழு கத்தாரின் போட்டிக் கோரிக்கையை அங்கீகரித்துவிட்டதாக அவர் கூறினார்.
 
அதே வேளை, கத்தாரில் குளிரான காலநிலை நிலவக்கூடிய ஆண்டின் இறுதிக்கட்டத்திற்கு போட்டி நகர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் பிஃபா தலைவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்