கொரோனா காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கொப்பைத் தொடரே நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து யாரும் வரக் கூடாது என்ற எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த தொடரும் தள்ளி வைக்கப்படலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டி20 உலகக் கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருந்த உலகக்கோப்பை வழக்கம் போல நடைபெறும் என்றும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மற்றொரு உலகக்கோப்பை நடைபெறும் எனவும் ஐசிசி உறுதியாக தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.