இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரை வென்றது இலங்கை

ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (05:05 IST)
இலங்கை அணியின் குமார் சங்ககாரவின் சதம் காரணமாக அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒரு நாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டித் தொடரை 4-2 என்ற விகிதத்தில் அது வென்றுள்ளது.

கண்டியில் பல்லேகல என்ற இடத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்களை எடுத்தது. 112 பந்துகளை எதிர்கொண்ட குமார் சங்ககாரா அதிகபட்சமாக 112 ரன்களை எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் சங்ககாரா தொடர்ந்து 5 போட்டிகளில் 50 ரன்களைத் தாண்டியுள்ளார். அதே நேரம் சங்ககார 41 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் அவர் கொடுத்த கேட்சை இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டர் குக் பிடிக்கத் தவறவிட்டார். தில்ஷானும் இந்தப் போட்டியில் அரை சதம் அடித்தார்.
 
இங்கிலாந்து அணியோ தனது ஆட்டத்தை மிக மோசமாகத் துவங்கியது. 84 ரன்களை எடுத்த நிலையில் அது தன்னுடைய முதல் 5 விக்கெட்டுக்களை இழந்தது. ஜோ ரூட் 55 ரன்களை எடுத்தும் அந்த அணி 202 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
 
இந்தியாவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் சொந்த மண்ணில் இலங்கை பெற்றுள்ள இந்த வெற்றி, உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்