சரிதா தேவி நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் - மில்கா சிங்

சனி, 17 ஜனவரி 2015 (18:28 IST)
சரிதா தேவி நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து கூறியுள்ள மில்கா சிங், “நடுவரின் முடிவினால் சரிதா தேவி பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக, வெற்றி மேடையில் பதக்கத்தை நிராகரித்திருக்கக் கூடாது. அவரது நடத்தை நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.
 
அவர் அப்படி நடந்திருக்கக் கூடாது. அந்த வழியில் தனது எதிர்ப்பை பதிவு செய்யக் கூடாது. புகார் தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்.
 
விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்பது முக்கியமான விஷயம். பதக்கங்கள் வெல்வதும், நாட்டுக்கு பெருமை சேர்ப்பதும்தான் வீரர்களின் பணி. விருதுகள் வழங்குவதும், வீரர்களின் திறமையை அங்கீகரிப்பதும் அரசின் கடமை.
 
எனக்கு 1958-இல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதன் பின், 2001-இல் அர்ஜுனா விருதுக்கு அரசு என் பெயரை பரிந்துரைத்தது. ஆனால், அதை நான் ஏற்கவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அர்ஜுனா விருது வழங்கப்படுவது எனக்கு சரி என்று படவில்லை. அதனால் அதை ஏற்கவில்லை.
 
சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கியதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கும் அந்த விருது கிடைப்பதற்கான வழி ஏற்பட்டது. ஆனால், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்துக்குத்தான் முதலில் பாரத ரத்னா கொடுத்திருக்க வேண்டும் என்பது என் கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்