மீடூ: பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - பி.வி. சிந்து
சனி, 19 ஜனவரி 2019 (12:30 IST)
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக மாறிவிட்ட நிலையில் அதை ஒழிப்பதற்காக பல வழிகளில் பெண்கள் துணிந்துள்ளனர். அந்த துணிச்சலின் ஒரு அங்கமாக திகழ்வதுதான் "மீடூ" . அண்மையில் எழுந்த இந்த மீடூ பிரசாரம் ஆண்களை பயத்துடன் நடந்துகொள்ளவும் பெண்கள் தங்களுக்கு நேரும் வன்கொடுமைகளை வெளியில் தைரியமாக சொல்லவும் வழி வகுத்துள்ளது.
இந்தியாவில் பெண்களை மதிப்பவர்கள் குறித்த எண்ணிக்கை அரிதாக இருக்கிறது என்றும் மீடூ பிரச்சாரம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என்றும் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியிருக்கிறார்.
‘பாலியல் வன்கொடுமையை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், பி.வி.சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது அவர் கூறியதாவது,
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த இந்தக் கருத்தரங்கத்துக்கு ஹைதராபாத் போலீஸார் ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாம் பெண்களை மதிக்க வேண்டும் என்ற பொதுவாக கருத்து இந்தியாவில் மக்கள் தெரிவிப்பார்கள். ஆனால், உண்மையில் அதை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை மிக அரிதானதாக இருக்கிறது.
பாலியல் வன்கொடுமையையும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்றே கருத வேண்டும். பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து ‘மீ டூ’ இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். வெளிநாடுகளில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த நாடுகளில் பெண்களுக்கு உரிய மரியாதையும் அவர்களுக்கான தனிப்பட்ட உரிமைகளும் அளிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
படித்த ஆண், பெண் ஆகிய இருவரும் சமூகத்தில் செயலாற்ற வேண்டிய கடமைகள் குறித்து அந்த இயக்கம் கற்பித்திருக்கிறது என்றார் பி.வி. சிந்து.