தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அரசு பணி: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

சனி, 24 செப்டம்பர் 2016 (10:41 IST)
ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு குரூப் 1 பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

 
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாரியப்பன், பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
 
பிரேசிலில் இருந்து, இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலு டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், தமிழகம் வந்த அவருக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டிராஜன், ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் கோரிக்கை வைத்தால் குரூப் 1 நிலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மாரியப்பன் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழக அரசு உதவி செய்யும் எனவும் தெரிவித்தார்.
 
தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கும் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்