ஒரு காலத்தில் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு என அறியப்பட்ட கிரிக்கெட் தற்போது அதன் நிறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் முதல் வாரிய நிர்வாகிகள் வரை அனைத்துத் தரப்பில் உள்ளவர்களும் சூதாட்டம் மற்றும் ஊழலில் ஈடுபடுகின்றன. சர்வதேசப் போட்டிகள் மட்டுமில்லாமல் மற்ற உள்ளூர் போட்டிகளில் கூட சூதாட்டங்கள் மலிவாகி விட்டன. அதற்குச் சிறந்த உதாரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாசில் சிக்கி 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட சம்பவம்.
அதனால் ஐசிசி தற்போது ஊழல் தடுப்புப் பிரிவு என்றப் பிரிவை உருவாக்கி ஒவ்வொரு நாட்டு கிரிகெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் வாரியங்கள் என அனைவரையும் கண்காணித்து வருகிறது. இது சம்மந்தமாக அவ்வப்போது ரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ விசாரணையிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் சூதாட்டம் முதல் பல்வேறு ஊழல்களில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சிக்கியது.
தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீதான ஐசிசி தரமதீப்பீடு பற்றி இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் அதிர்ச்சித் தகவலகளை தெரிவித்துள்ளார். அவர் ’கிரிக்கெட் ஊழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மிக மிக மோசமாகத் திகழ்கிறது என்று ஐசிசி மதிப்பிட்டுள்ளது அவமானத்துக்குரியது. இது வெறுமனே புக்கிகளுடனான தொடர்புடன் நிற்பதல்ல. உள்ளூர் போட்டிகள் கூட நிழலுலுகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது’ என வருத்தம் தெரிவித்தார்.