அமர்க்களமாக தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டி - வண்ணங்களும் வன்முறையும்
வெள்ளி, 13 ஜூன் 2014 (10:45 IST)
பிரெசிலில் 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றிரவு கோலாகலமாக தொடங்கியது. பிரேசில் நாடே இந்தப் போட்டிக்காக தன்னை வண்ணமயமாக மாற்றிக் கொண்டது.
தொடக்கவிழா நடத்த அரேனா கொரிந்தியன்ஸ் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. பிரெசிலின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நினைவுப்படுத்தும் வகையில் அந்நாட்டுக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. செடி கொடிகள் போன்றும், பூக்கள் போன்றும் அலங்காரம் செய்யப்பட்ட நடனக் கலைஞர்களின் வண்ணமயமான நடனம் கண்ணை கவர்வதாக இருந்தது.
மைதானத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பந்து வடிவ எல்இடி மேடையில் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் 2014 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின், அனைவரும் ஒன்றே என்ற பொருள்படும் பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடன் பாடகர் பிட் புல்லும் நடனக் கலைஞர்களும் இணைந்து மைதானத்தை அதிர வைத்தனர்.
நடனத்தாலும், இசையாலும், கண்கவர் உடையாலும் பிரெசில் கலைஞர்கள் தொடக்கவிழாவை அசத்திவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். பிரெசில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை தொடக்கவிழாவை சிறப்பாக்க வேண்டும் என்பதைவிட அதிக தலைவலி உள்ள விஷயமாக இருந்தது கால்பந்துப் போட்டிக்கு எதிரான மக்களின் போராட்டம்.
போட்டி தொடங்குவதற்கு பல வாரங்கள் முன்பே பிரேசில் உலகக் கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியது.
கல்வி, தொழில் என்று அனைத்திலும் பின்தங்கியிருக்கும் ஒருநாடு விளையாட்டுக்கென்று 85,000 கோடிகளை ஒதுக்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தெருவில் இறங்கிப் போராடியவர்கள் பிரேசில் அரசின் அரசியல் எதிரிகள் அல்ல. மாணவர்கள், தொழிலாளிகள், அரசு ஊழியர்கள்.
போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பு மெட்ரோ பணியாளர்கள் தொடக்க விழா நடைபெறும் மைதானத்துக்கு செல்லும் சாலையில் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பல்லாயிரம் கோடிகள் விளையாட்டுக்காக செலவிடும் அரசு தங்களின் 12.2 சதவீத போனஸ் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாதது அவர்களை கோபப்படுத்தியிருந்தது.
ஏராளமான பொதுமக்களும் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். கடைசி நிமிடப் பதற்றத்துடனே தொடக்கவிழா ஆரம்பமானது.
கால்பந்து விளையாட்டை மதமாக வழிபடும் நாட்டில் இப்படியொரு எதிர்ப்பை பிரெசில் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. வரும் நாள்களில் போராட்டக்காரர்களை சமாளிப்பது பிரெசில் அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கப் போகிறது.