நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணிவீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஒரு காலை மடக்கி மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக உறுதி மொழி எடுப்பதாக முடிவு செய்தனர். ஆனால் அதைக் கடந்த போட்டியில் டிகாக் செய்யவில்லை. அதனால் அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பலரும் டி காக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு டி காக் விளக்கம் அளித்துள்ளார். அதில் என்னால் எழுந்த குழப்பத்துக்கும் கோபத்துக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நிறவெறிக்கு எதிராக நிற்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடாததன் மூலம் நான் யாரையும் மரியாதைக் குறைவாக கருதவில்லை.
நான் கலப்பின குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னுடைய வளர்ப்புத்தாய் கருப்பினத்தைச் சேர்ந்தவர். என் நாட்டுக்காக ஆடுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் ஒன்றைச் செய்ய சொன்னால் அதன் அர்த்தத்தை இழக்கிறது. என்னுடன் விளையாடியவர்களுக்கு நான் எப்படிப்பட்டவன் என்று தெரியும். என்னை நிறவெறியன் என்றால் அது காயப்படுத்தும் ஏனெனில் நான் அப்படியல்ல. இது என்னைக் காயப்படுத்துகிறது, கருத்தரிக்கும் என் மனைவியைக் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையே காயப்படுத்துகிறது. எனக் கூறியுள்ளார்.