கால்பந்து மைதானத்தில் மோதல் - 22 பேர் பலி

திங்கள், 9 பிப்ரவரி 2015 (16:01 IST)
எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

 
எகிப்து நாட்டின் கெய்ரோ ஏர் டிஃபன்ஸ் மைதானத்தில் எகிப்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் மைதானத்தில் அதிக அளவில் குவிந்தனர்.
 
அப்போது டிக்கெட் கிடைக்காத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கால்பந்து ரசிகர்கள் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது ரசிகர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
 

 
இதிலிருந்து மற்ற ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தப்பி ஓடமுயன்ற போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
மிகப்பெரிய கலவரமாக ஏற்பட்ட பின்பு ரசிகர்கள் அங்குள்ள கட்டடங்களுக்கு தீவைத்தனர். கலவரம் மேலும் பரவாமல் இருக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு அணிகளின் ரசிகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்