2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
வெள்ளி, 24 நவம்பர் 2017 (17:47 IST)
இந்தியாவில் ஆண்களுக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரை போல, பிசிசிஐ பெண்களுக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், பிசிசிஐ நடத்தும் 19 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒருநாள் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளா - நாகாலாந்து மகளிர் அணிகள் மோதின. இந்த போட்டியால் பிசிசிஐ அதிர்ச்சியில் உள்ளதாம்.
முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 17 ஓவர்கள் பேட்டிங் செய்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் ஒரு ரன் மட்டுமே வீராங்கனையால் அடிக்கப்பட்டது. மீதம் ஒரு ரன் வைடு மூலம் கிடைத்தது.
தொடக்க ஓவரை வீசிய அலீனா சுரேந்திரன் முதல் மூன்று ஓவர்களில் ஒரு வைடு மற்றும் ஒரு ரன் மூலம் இரண்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
முதலில் களமிறங்கிய வீராங்கனை ஒரு ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய வீராங்கணைகள் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள்.
பின்னர் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரள அணி களமிறங்கியது. முதல் பந்தை பவுண்டரி அடித்து அணியை வெற்றியை உறுதி செய்தனர் கேரள அணி. 299 பந்துகள் மீதமிருந்த நிலையில் கேரள அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.