293 ரன்கள் இலக்கை 43 ஓவர்களில் அடித்து நொறுக்கிய வங்கதேசம்

வியாழன், 16 மே 2019 (10:02 IST)
மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 6வது போட்டியாக அயர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி டப்ளின் நகரில் நேற்று நடைபெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வங்கதேசத்தின் பவுலிங்கை அடித்து நொறுக்கி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 292 ரன்கள் எடுத்தது. ஸ்டிர்லிங் மிக அபாரமாக விளையாடி 141 பந்துகளில் 130 ரன்கள் அடித்தார். அதேபோல் போர்ட்டர்பீல்ட் 106 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார்.
 
இந்த நிலையில் 293 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 294 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் லிடொன் தாஸ் 76 ரன்களும், தமீம் இக்பல் 57 ரன்களும், ஷாகி அல் ஹசன் 50 ரன்களும், அதிரடியாக குவித்தனர். ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய வங்கதேச பந்துவீச்சாளர் அபு ஜயத் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்