மும்பை மராத்தான் பந்தயத்தில் கென்ய வீரர் வெற்றி

ஞாயிறு, 17 ஜனவரி 2010 (16:59 IST)
மும்பையில் நடந்த 7வது மராத்தான் பந்தயத்தில் ஆடவருக்கான பிரிவில் கென்ய வீரர் டெனிஸ் டிஸோ வெற்றி பெற்றார். மகளிருக்கான பிரிவில் பிஜினேஷ் முகமது முதல் இடத்தைப் பிடித்தார்.

மும்பையில் நடப்பு ஆண்டுக்கான மராத்தான் பந்தயம் இன்று காலை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியது. மராத்தான் (42.195 கி.மீ), மினி மராத்தான் (21.097 கி.மீ) உட் பட 5 பிரிவுகளில் பந்தயம் நடந்தது.

இதில் கென்யா, எத்தியோபியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 38 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர்கள் அக்சய் குமார், குல் பனாங், ராகுல் போஸ், ஜான் ஆப்ரகாம், ரெய்ட்ஸ் தேஷ்முக், குல்ஷான் குரோவர், டினா அம்பானி உட்பட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

மராத்தான் பந்தயத்தில் கென்யா வீரர் டெனிஸ் டிஸோ வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 2 மணி 12 நிமிடம் 34 வினாடிகளில் கடந்தார். எத்தியோப்பியாவை சேர்ந்த சிராஜ் ஜெனா 2 மணி 13 நிமிடம் 58 வினாடியில் கடந்து 2வது இடத்தையும், மற்றொரு கென்யா வீரர் சாம்சன் 2 மணி 14 நிமிடம் 24 வினாடியில் கடந்து 3வது இடத்தையும் பிடித்தனர்.

மகளிருக்கான பிரிவில் முதல் 10 இடங்களையும் எத்தியோப்பியா வீராங்கனைகள் பிடித்தனர். பிஜினேஷ் முகமது முதலிடத்தையும் (2 மணி 31.09 நிமிடம்), கெய்லி 2வது இடத்தையும் (2 மணி 31.11 நிமிடம்), மாஸ்ரேச்சா (2 மணி 32.12 நிமிடம்) 3வது இடத்தையும் பிடித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்