பாக்சிங்: விகாஸ் வெற்றி திரும்பப்பெறப்பட்டது! இந்தியா அதிர்ச்சி!

சனி, 4 ஆகஸ்ட் 2012 (12:59 IST)
FILE
ஒலிம்பிக் குத்துசண்டையில் 69 கிலோ பிரிவில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றியை திரும்ப பெற்றது சர்வதேச குத்துச்சண்டை சங்கம். இதனால் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது

குத்துச்சண்டை பிரிவில் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் பங்கேற்றுள்ளார். 20 வயதான விகாஸ், அமெரிக்க வீரர் ஈரால் ஸ்பென்ஸை எதிர்கொண்டார்.

இதில் 13- 11 என்ற கணக்கில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவரும் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவுக்கு குத்துச்சண்டையில் ஒரு பதக்கம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

விகாஸ்க்கு நடுவர்கள் கொடுத்த தீர்ப்பு தவறானது என்ற அடிப்படையில், அவரது வெற்றியை திரும்ப பெற்றது சர்வதேச குத்துச்சண்டை வாரியம். அதாவது 3வது சுற்றில் மட்டும் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் மொத்தமாக 9 முறை முறைதவறி விளையாடியுள்ளார். ஆனால் நடுவர்கள் விகாஸ்க்கு ஒரே ஒரு முறை மட்டுமே எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

மேலும் 2வது ரவுண்ட்டில் விகாஸ் கிருஷ்ணன் தனது வாயில் பொருத்தியிருந்த பாதுகாப்பு சாதனத்தை எதிர் வீரர் ஸ்பென்ஸ் மீது எறிந்ததாகவும், அதை நடுவர் சரியாக கவனிக்கவில்லை என்றும், இதன் அடிப்படையில் சர்வதேச குத்துச்சண்டை 12.1.9 விதியின் படி எதிர்வீரருக்கு நான்கு புள்ளிகள் அளிக்க வேண்டும்.

அதன்படி நான்கு புள்ளிகள் அளித்ததில் அமெரிக்கவீரர் ஸ்பென்ஸ்க்கு 15 புள்ளிகளும், இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் 13 புள்ளிகளும் பெற்றனர். இதனையடுத்து அமெரிக்க வீரர் வெற்றி பெற்றதாகவும், இந்திய வீரர் விகாஸின் வெற்றியை திரும்ப பெறுவதாகவும், சர்வதேச குத்துச்சண்டை வாரியம் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக இந்திய குத்துச் சண்டை கழகம் கூட்டம் ஒன்றை நடத்தி மேல்கட்ட நடவடிக்கைக்காக ஆலோசனை செய்யவுள்ளது.

நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டைகளில் புள்ளிகள் அளிக்கும் முறை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. ஏற்கனவே பங்கேற்பு நாடுகள் அளித்துள்ள புகார்களின் படி 2 நடுவர்கள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்