நாக்பூர் டெஸ்ட்: ஸ்டீவ் ஃபின் இல்லை!

புதன், 12 டிசம்பர் 2012 (18:06 IST)
FILE
கடந்த டெஸ்ட் போட்டியில் அரைசதம் எடுத்த தோனியை அபாரமான பவுன்சர் வீசி வீழ்த்தி மொத்தம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் நாளை இந்தியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் காயம் காரணமாக களமிறங்கமாட்டார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஆமதாபாத், மும்பை டெஸ்ட் போட்டிகளில் தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போன ஃபின் கொல்கட்டாவில் இங்கிலாந்து வெற்றிக்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை செய்தார்.

இந்த நிலையில் முதுகுவலி காரணமாக அவர் நாளைய டெஸ்டில் விளையாடமாட்டார். இவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் விளையாடலாம் என்று தெரிகிறது.

தொடரை 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் நோக்கத்துடன் சீரிய முறையில் விளையாடி வரும் இங்கிலாந்துக்கு இது பின்னடைவா என்பது இந்த டெஸ்ட் துவங்கியவுடந்தான் தெரியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்