நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு வலியுறுத்தினால் விலகுவோம் - இந்தியா மிரட்டல்!

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (15:42 IST)
FILE
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்) திட்டத்தை வலியுறுத்தினால் அந்தத் தொடரிலிருந்து விலகுவோம் என்று இந்தியா அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

நேற்று துபாயில் நடந்த ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் டீ.ஆர்.எஸ். குறித்த விவாதத்தில் இங்கிலாந்து தலைவர் ஜைல்ஸ் கிளார்க் எந்த ஒரு நாடு தொடரை நடத்துகிறதோ அந்த நாடு விரும்பினால் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு வைக்கலாம் என்று புதிதாக ஒரு விதிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றார்.

ஆனால் அவரது இந்தக் குரலுக்கு ஆதரவகாக ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஸ்ரீனிவாசன், பயணம் மேற்கொள்ளும்போது கிரிக்கெட் தொடரை நடத்தும் நாடு ஏகமனதாக நடுவர் தீர்ப்பு மேல்முறையிட்டை அமல் செய்தால் அந்தத் தொடரிலிருந்து இந்தியா விலகும் என்று அச்சுறுத்தியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பத்தை சுலபமாக சூழ்ச்சி செய்து சாதகமாக மாற்ற முடியும் என்பது ஸ்ரீனிவாசனின் வாதமாம்.

ஜைல்ஸ் கிளார்க்கின் திட்டத்தை மற்ற நாடுகள் ஏற்கவில்லை என்றாலும், டி.ஆர்.எஸ். திட்டத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பதில் இந்தியாவைத் தவிர மற்ற நாட்டு வாரியங்கள் ஆதரவே தெரிவித்து வந்துள்ளது. இன்றும் ஆதரவளித்து வருகிறது.

தற்போது உள்ள கொள்கை முடிவுகளின் படி விளையாடும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால்தான் மேல்முறையீடு மறுபரிசீலனையை நடைமுறைப்படுத்த முடியும், ஆனால் போட்டித் தொடரை நடத்தும் நாடு சம்மதித்தால் போதும், பயணம் செய்யும் அணி அதற்கு ஒப்புக் கொண்டேயாகவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறையைத்தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஜைல்ஸ் கிளார்க் முயன்றார்.

இந்தியா முதன்முறையாக இதனை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டீ.ஆர்.எஸ்.-இல் தவறுகள் நடைபெறுகிறது என்றாலும், சில மோசமான நடுவர் தீர்ப்புகளை மறுத்து அவுட் கொடுக்கவோ அல்லது நாட் அவுட் என்று தீர்மானிக்கவோ அந்தத் திட்டம் பயன்படுகிறது. அதனை இவ்வளவு தீவிரமாக இந்தியா மறுக்கவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்