கேப்டன் பதவிக்கு சேவாக் தகுதியானவர் அல்ல-அக்ரம்

புதன், 1 பிப்ரவரி 2012 (11:53 IST)
தோனியின் கேப்டன் பதவிக்கு இப்போது மோசமான காலம். அதேநேரத்தில் சேவாக், கேப்டன் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரலியாவுக்கு எதிரான படுதோல்வி காரணமாக தோனியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்குப் பதிலாக சேவாக்கை கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்து வலுத்துள்ள நிலையில், அக்ரம் மேலும் கூறியிருப்பது:

இந்திய அணியை வழிநடத்திச் செல்ல தோனியே சிறந்த வீரர் என்று நம்புகிறேன். அவரே கேப்டனாகத் தொடர வேண்டும். பிசிசிஐயின் திட்டமிடுதலாலேயே இந்திய அணி அன்னிய மண்ணில் படுதோல்வி கண்டுள்ளது. அதற்கு தோனியை பலிகடாவாக்குவது நியாயமானது அல்ல.

அடுத்த கேப்டனுக்கு சேவாக், கோலியின் பெயர்கள் அடிபடுகின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் இருவருமே அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு தலைமை வகித்த சேவாக்கிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

ஆனால் அவர் சரியாக வழிநடத்தாது ஏமாற்றத்தையே அளித்தது. கோலி இப்போதுதான் அணியில் இடம்பிடித்துள்ளார். எனவே அவர் கேப்டனாவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்