இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற பொது மன்னிப்பு கேட்க பீட்டர்சன் முடிவு

திங்கள், 1 அக்டோபர் 2012 (13:48 IST)
டுவிட்டர் விவகாரத்தில் சிக்கி இங்கிலாந்து அணியில் இடம்பெறாமல் உள்ள அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன் தனது நடத்தைக்கு பொதுமன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கியவர் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த கெவின் பீட்டர்சன்.

சக வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருடனான தொடர்பில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய குறுஞ்செய்தியை தென் ஆப்பிரிக்காவிற்கு பீட்டர்சன் அனுப்பி உள்ளார்.

இதனால் அவர் அணியில் இடம் பெறுவது கேள்வி குறியாகி விட்டது. மேலும், இவருக்கும் அணிக்கும் இடையேயான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததால் தற்போது அவர் அணியில் இடம் பெறவில்லை.

எனவே, அணியில் இடம் பிடிக்க அவர் பொது மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவரிடம், வருகிற 2015 உலக கோப்பை போட்டி வரை அனைத்து நிலைகளிலும் விளையாட தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிலைமையை உற்றுநோக்கி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு அவரை ஒப்பந்தம் செய்ய ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்