ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட்டே நாடகமான பிறகு தற்போது அணியை ஏலம் எடுத்தவர்கள் எழுப்பும் முழக்கங்களும், கொடுக்கும் பேட்டிகளும் அடுத்த கட்ட நாடகத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதை காட்டுகிறது.
webdunia photo
WD
சமீபத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமைதாரர் விஜய் மல்லையா, அணித் தலைவர் திராவிடும், அப்போதைய அணியின் தலைமை செயல் அதிகாரியுமான சாரு ஷர்மாவும் தங்கள் விருப்பதிற்கிணங்க அணியை தேர்வு செய்தனர் என்றும், தான் வைத்திருந்த நட்சத்திர வீரர்கள் பட்டியலை வேண்டுமென்றே புறக்கணித்தனர் என்றும் தனியார் தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது அந்த அணி கிரிக்கெட் ஆட்டத்தில் செய்த சொதப்பல் காரணமாகவா? அல்லது இதுவும் ஒரு வணிகத் தோல்வியாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது நியாயமே.
ஒவ்வொரு அணிக்காகவும் அதன் உரிமைதாரர்கள் வீரர்கள் மீது ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்கின்றனர். எதற்கு? வீரர்களின் வாழ்வாதார சக்திகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அழகு பார்ப்பதற்காகவா? ஒரு போதும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட வீரர் மீது கோடிக்காணக்கான தொகை முதலீடு செய்யப்படுகிறது என்றால், வீரர்களின் ஆட்டத் திறனை பொறுத்து அவர்களது பரிமாற்ற மதிப்பு கூடுகிறது. அதாவது மேத்யூ ஹெய்டன் இந்த தொடரில் அதிகபட்சமாக ரன்களை குவித்து சிறந்த பேட்ஸ்மெனாக இருந்தால். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் அவரை வேறு அணிக்கு விற்க பலத்த தொகையை நிர்ணயிக்கலாம். உதாரணமாக தோனியின் விலை 9 கோடி என்றால் அடுத்த முறை 15 அல்லது 20 கோடி கொடுத்தால் வேறு அணிக்கு அவரை ஒப்படைக்கிறேன் என்று நிர்ணயம் செய்யலாம்.
webdunia photo
WD
தற்போது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் உரிமைதாரரும் தொழில் அதிபருமான விஜய் மல்லையா, தன் அணி சரியில்லை, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது, அரையிறுதி வாய்ப்பு பறிபோனது என்றெல்லாம் கூறி திராவிடும், நீக்கப்பட்ட அணியின் தலைமைச் செயல் அதிகாரி சாரு ஷர்மாவும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும்
அறிக்கை விடுவதன் பின்னணியில் இந்த பரிமாற்ற அல்லது மறு விற்பனை பேர அரசியல்தான் உள்ளது.
அவர் ஏதோ தன் அணி சரியாக கிரிக்கெட் ஆடாமல் இம்மாதிரி கடைசி இடத்தில் முடிந்திருப்பதை தனது கவுரவப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்ற ஒரு சிந்தனை நிலவுகிறது. இது முற்றிலும் தவறு என்று கூற முடியாது. ஆனால் வெறும் கவுரவ இழப்பை மட்டுமா மல்லையாவின் கூற்று பிரதிபலிக்கிறது? அல்ல.
அடுத்த முறை திராவிட், காலிஸ், சந்தர்பால் போன்ற வீரர்களையும் அந்த அணியின் பந்து வீச்சாளர்களையும் மேலும் அதிகத் தொகை கொடுத்து யார் இவரிடமிருந்து வாங்குவார்கள் என்ற கவலைதான் விஜய் மல்லையாவிற்கு உள்ளது.
நாம் விளையாடும் தெரு கிரிக்கெட்டில் இந்த டீம் எனக்கு கட்டவில்லை என்று கூறுவது போன்ற அப்பாவித் தனமான விஷயம் இல்லை இது. பண விவகாரம். சுமார் 400 கோடிக்கும் மேல் முதலீடு செய்து பணக்காரர்கள் விளையாடும் சந்தை போட்டியாகும் இது.
மேலும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இல்லையெனும் பட்சத்தில் இதற்கு பிறகு பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஆடும் போட்டிகளுக்கு கூட்டம் வராது என்பதும் ஒரு காரணம். ஆனால் இந்த வாதமும் செல்லுபடியாகாது. ஏனெனில் 8 அணியின் உரிமைதாரர்களும் இந்த பொட்டித் தொடரினால் கிடைக்கும் வருவாயை பகிர்ந்து கொள்ளத்தான் போகின்றனர்.
ஆனால் தனிப்பட்ட வீரர்கள் மேல் குதிரை ஜாக்கியை நம்பி பணம் கட்டுவது போல் கட்டியிருப்பது, இந்த போட்டித் தொடரில் வெல்ல வேண்டும், சாம்பியன் ஆக வேண்டும் என்ற கிரிக்கெட் உணர்வு சார்ந்த அக்கரையினால் அல்ல. முதலீடு செய்து எடுத்த வீரர்களை அடுத்த ஏலத்தில் மறு விற்பனை செய்யும்போது அலுங்காமல் குலுங்காமல் லாபம் சம்பாதிக்கலாமே. இப்போது அந்த வாய்ப்பு பறிபோனதே என்ற ஒரு சாதாரண வியாபாரியின் புலம்பல்தான் விஜய் மல்லையாவின் புலம்பலும்.
ஆனால் திராவிட், காலிஸ், பவுச்சர் போன்ற கிரிக்கெட் ஆட்டத்தில் தங்கள் பெயர்களை நிலை நாட்டி தங்களது நாட்டிற்காக நல்ல கிரிக்கெட்டை அர்ப்பணிப்புடன் ஆடியவர்கள் விஜய் மல்லையாவின் இதுபோன்ற ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்துவதாய் உள்ளது என்பது மட்டும் உறுதி.