வணிக மயமாகும் கிரிக்கெட்! வளருமா? தேயுமா?

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (16:50 IST)
webdunia photoWD
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) குறித்து ஆதராவாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் தேசத்தின் அவமானம் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் அனுபவமிக்க முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்டட், ஐ.சி.எல்-ஐ பலி கடாவாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் பல நிபுணர்களும், ரசிகர்களும், முன்னாள் வீரர்களும், வர்த்தக நிறுவனத் தலைவர்களும் ஐ.பி.எல். குறித்து உடன்பாடாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகளை வழங்கும்போது ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது. இ.எஸ்.பி.என். ஸ்டார் - நெட் வொர்க் தனக்கு சேர வேண்டிய ஒப்பந்தம் கிடைக்கவில்லை, இதற்கு ஒப்பந்தப் புள்ளியை பி.சி.சி.ஐ. தனக்கு சாதகமாக முறையற்று பயன்படுத்தியது என்று வழக்கு தொடர்ந்தது. ஸீ நெட் வொர்க், நிம்பஸ், சோனி என்று அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் பி.சி.சி.ஐ ஒப்பந்தத்திற்காக மோதின. இதில் நிம்பஸ் வெற்றி பெற்றது. ஏனெனில் நிம்பஸ் குறிப்பிட்டிருந்த தொகையை இந்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷன் கூட நெருங்க முடியாது.

அப்போது தனிப்பட்ட ஒளிபரப்பு உரிமை பற்றி நிம்பஸ் கவலைப்படவில்லை. அதன் பிறகு இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் ஒளிபரப்புகளை தூர்தர்ஷனுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. நிம்பஸ் தலையில் இடி விழுந்தது. அந்த நஷ்டங்களிலிருந்து இன்னமும் நிம்பஸ் விடுபடவில்லை. அப்போது ஸீ தொலைக்காட்சி குழுமம் நிம்பசின் உதவிக்கு வந்தது, கிரிக்கெட் ஒளிபரப்புகளை நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்டது. நிம்பஸ் மறுத்து விட்டது.

webdunia photoWD
இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு உலகக் கோப்பையில் நாம் தோற்று வெளியேறுகிறோம். கிரெக் சாப்பல் இந்திய மூத்த வீரர்களை மாஃபியா என்று வர்ணித்தார். இளம் வீரர்களை விளம்பர வருவாய்களுக்காக இவர்கள் அணியில் வரவிடாமல் செய்கின்றனர் என்று ஊடகங்கள் எழுதத் துவங்கி பெரும் களேபரம் ஏற்பட்ட போது, சீ தொலைக்காட்சி நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி கொடுக்க ‘இந்திய கிரிக்கெட் லீக’ என்று தனிப்பட்ட ஒரு தனியார் மய கிரிக்கெட் லீகை அறிவித்தது. உலக வீரர்களெல்லாம் இதற்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டு பயந்து நடுங்கிய பி.சி.சி.ஐ. உடனேயே ஐ.பி.எல். என்ற ஒன்றின் துவக்கத்தை அறிவித்தது, அது நேற்று முழு வடிவத்திற்கு வந்துள்ளது.

எனவே இது முழுக்க முழுக்க வர்த்தக் நோக்கத்திற்கே என்பதில் ஐயமில்லை. ஒரு சிலர் ஐரோப்பிய கால்பந்து இது போன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ்தானே இயங்குகிறது என்றும், கிளப் கால்பந்து நடக்கும்போது கிளப் கிரிக்கெட் நடக்கக் கூடாதா? என்று கேட்கலாம்.

ஆனால் கால்பந்து தேசங்களுக்கு இடையே ஆடப்படும் முன் கிளப்புகளுக்கு இடையேதான் நடைபெற்றது என்பது வரலாறு. கால்பந்து வெறி தேசிய வெறியாக அல்லது தேச வெறி கால்பந்து வெறியாக மாறியது பிற்பாடுதான். ஆனால் கிளப் கால்பந்திற்கு ஒரு தொடர்ச்சி இருப்பதால் அங்கு அது இன்னமும் வணிக ரீதியாக வெற்றி பெற்று வருகிறது.

webdunia photoWD
ஆனால் கிரிக்கெட்டின் கதை அப்படியல்ல. நாம் ஒரு டெஸ்ட் போட்டியோ, ஒரு நாள் போட்டியோ, 20 - 20 போட்டியோ பார்க்க உட்காருகிறோம் என்றால், எந்த நாடு வெற்றி பெறவேண்டும் என்று முடிவு செய்து கொண்டுதான் உட்காருகிறோம். அதுதான் கிரிக்கெட்டின் சுவாரசியமான அம்சம். அதாவது நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியினால்தான் கிரிக்கெட் சுவாரசியம் அதிகமாகி இன்று ஐ.பி.எல்.லில் வணிக அசுரர்கள் போட்டிக் கொண்டு முதலீடு செய்கின்றனர்.

இந்த நிலையில் இந்தியா சிமென்ட்ஸ் அணிக்கும் மும்பை ரிலையன்ஸ் அணிக்கும் இருபதுக்கு 20 போட்டியை அனைவரும் காண வாருங்கள் என்று கூப்பாடு போட்டு அழைத்தாலும் டிக்கெட் விற்றால் வாங்க ஆளிருக்காது என்பதுதான் உண்மை.

webdunia photoWD
மேலும் இந்த ஐ.பி.எல். 20- 20 போட்டி நடைபெறும்போது இந்தியா- பாகிஸ்தான் ஒரு நாள் சர்வதேச போட்டி நடைபெறுகிறது என்று வைத்துக் கொண்டால் நாம் எதைப் பார்ப்போம். விளம்பரதாரர்கள் எந்த போட்டிக்கு விளம்பரம் அளிப்பார்கள்? நாடுகளுக்கு இடையே நடக்கும் உணர்ச்சிகரமான போட்டிகளுக்குத்தான் விளம்பர வருவாய் கிடைக்கும். ஏனெனில் நாம் அந்த போட்டியைத் தான் பார்த்து ரசிப்போம்.

எதை நம்பி வீரர்கள் மீது இந்த அசுர முதலீடு செய்யப்படுகிறதோ அதன் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரான முடிவுகளை ஐ.பி.எல். சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா தவிற மற்ற நாடுகளில் பிரதேச அளவிலான கிரிக்கெட் சீரழிந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் நாடுகளில் சில படு மோசமான நிலையிலேயே உள்ளது. தற்போது இந்த பண முதலைகளின் பணக் கவர்ச்சிக்கு ஆட்படும் இளம் வீரர்கள் ஐ.பி.எல். மட்டுமே தனக்கு போதுமானது என்று நினைக்கலாம். இதனால் தேச அளவில் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்படலாம்.

இதனால் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் நாளடைவில் மறைந்து இந்த கார்ப்பரேட் கிளப் வடிவ கிரிக்கெட் மெதுவே பிரபலமடையலாம். குறைந்தது கிரிக்கெட் பார்க்கும்போதாவது எழும் கொஞ்ச நஞ்ச தேச உணர்வும் காலியாகி, பண முதலைகளின் கவர்ச்சி நடனமான இந்த கிரிக்கெட்டிற்கு மவுசு அதிகரிக்கலாம்.


webdunia photoWD
ஏற்கனவே உள் நாட்டு கிரிக்கெட் மோசமான நிலையில் உள்ளது. அதனை சீர்செய்ய இந்த வணிக நிறுவனங்களை பயன்படுத்துவதே சிறந்தது. அதனை விடுத்து நாட்டின் கிரிக்கெட்டையே பண முதலைகளிடம் அடகு வைத்தால் கிரிக்கெட் எப்படி வளரும்? கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய அசுர வணிக மய ஐ.பி.எல்.களால் ஒன்றும் செய்ய முடியாது.

இப்போதே ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் பாகிஸ்தானுக்கு வருவது சந்தேகம் என்கிறார். நாளை நம் தோனியும், ஹர்பஜனும் ஏன் சேவாகும் திராவிடுமே இருபதுக்கு 20 கிளப் போட்டிகளுக்காக தேசியக் கடமைகளை துறக்க முன் வரலாம்.

webdunia photoWD
மைதானங்களுக்கு வந்து ரசிகர்கள் பார்ப்பதால் ஏற்படும் வருவாயை நம்பி தற்போது எந்த கிரிக்கெட் வாரியமும் இல்லை. தொலைக்காட்சி ஒளிபரப்பினால் கிடைக்கும் அபரிதமான வருவாய்தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இன்னும் சில நாட்களில் கிரிக்கெட் விளையாட்டும் அனைத்து நாடுகளும் இது போன்ற லீக் வடிவங்களை துவங்கலாம். மேலும் வணிக மயமாகலாம். வீரர்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம், என்று உடன்பாடானா அம்சங்கள் நிறைய இருந்தாலும். மரபான அம்சங்கள் கிரிக்கெட்டில் அழிந்து விடும். நாடுகளுக்கு இடையேயயான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் குறைந்து விடும். தினமும் உலகத்தின் எந்த மூலையிலாவது கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும், அதன் ஒளிபரப்புகள் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆனால் நாம் இழப்பது எது என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்?

webdunia photoWD
நமது வாழ்க்கையின் பல முகங்கள் இன்று வணிக மயமாகி வருகின்றன. கல்வியே நமது நாட்டில் பெரும் வணிகங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் இன்றைய நிலையில் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால் அதன் விளைவுகளும் தவிர்க்க முடியாததே.

கிரிக்கெட் விளையாட்டை அதில் ஈடுபடும் அணிகளின், வீர்ர்களின் அபாரத் திறனிற்காகவும், அந்த விளையாட்டு உருவாக்கும் கலப்பற்ற மகிழ்ச்சிக்காகவுமே இதுநாள் வரை ரசித்து வந்தோம். கிரிக்கெட் விளையாட்டின் மீது நாம் கொண்டிருக்கும் அபரிதமான பற்றுதலையே இன்று ஐ.சி.சி.யும், மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் காசாக்கி வருகின்றன. ஐ.பி.எல். மூலம் கிரிக்கெட் விளையாட்டு தொழில் நிறுவனங்களுக்கு திறததுவிடப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் விளையாட்டின் தூய்மை பாதிக்காது என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இலாபத்திற்காக மறைமுக விளையாடல்கள் கிரிக்கெட்டை பாதிக்காது என்று யார் உறுதி கூற முடியும்?

webdunia photoWD
ஒன்று மட்டும் நிச்சயம், இதற்கு மேல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்‌ப்பவர்களுக்கு அது முன்பு போல் இல்லை என்பதை நிச்சயம் உண‌ர்வார்கள்.