சிட்னி கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெறும் நடுவர்களின் தவறுகள், கவனமின்மை, வயதான நடுவர், வேறு நடுவர் இருந்திருந்தால் ஆட்டம் நியாயமாக நடந்திருக்கும் என்றெல்லாம் கூறப்படுவது நம்மை திசை திருப்புவதற்காக கூறப்படுவதாகவே தெரிகிறது.
webdunia photo
FILE
ஆனால் நடுவர்களை ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் விலைக்கு வாங்க முடியாதா? என்ற கேள்வியையே 2வது டெஸ்ட்டில் நடந்தவற்றைப் பார்க்கும்போது இயற்கையாகவே எழுகிறது. ஸ்டீவ் பக்னர் கடந்த 2004ம் ஆண்டில் அதிக போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு 440 டாலர்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அவர் 1,20,000 டாலர்கள் தொகையை ஊதியமாக பெற்றுள்ளார். ஆனால் வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக பணியாற்றினாரா என்றால், இல்லை என்பதே நம் வருத்தத்திற்குரிய உண்மை.
பக்னர் இப்படியென்றால் மார்க் பென்சனின் நடத்தை நடுவர் என்பதைவிட ஆஸ்ட்ரேலிய அணியின் ஒரு வீரர் அங்கு தீவிரமாக ஆஸ்ட்ரேலிய அணிக்காக இயங்குகிறார் என்றே நம்மை நம்ப வைக்கிறது. ஒரு
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலிய நடுவருக்கு கூட நாம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறோமோ என்று அஞ்சி ஓரிரு அவுட்களை ரகசிய மன்னிப்பு கோரியபடி ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக கொடுத்திருப்பார். ஏனெனில் எங்களுக்கும்தான் தவறாக அவுட் கொடுத்தார் என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் பின்பு அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.
நடுவர்களின் பொய்களும், மோசடிகளும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் புதிதல்ல. நட்சத்திர வீரர்கள் கெர்ரி பேக்கர் தொடருக்கு சென்று விட்டிருந்தபோது, பாப் சிம்ப்சன் தலைமையிலான 2ம் நிலை ஆஸ்ட்ரேலியாவை பிஷன் பேடி தலைமை இந்திய அணி சந்தித்த நாளிலிருந்தே ஆஸ்ட்ரேலிய நடுவர் மோசடிகள் இந்திய அணிக்கு எதிராக செயல்படத் துவங்கியுள்ளது என்பது கிரிக்கெட்டை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்.
இந்திய அணிக்கு எதிராக 12 தவறான தீர்ப்புகள்!
சிட்னி டெஸ்டிற்கு நாம் வருவோம். நடுவரின் 12 முடிவுகள் (குறைந்தது) இந்திய அணிக்கு எதிராக திரும்பியுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் பந்தை எட்ஜ் செய்து தோனி பிடித்த கேட்சை நாட் அவுட் என்று (பென்சன்) மோசடி செய்யத் துவங்கியதிலிருந்து அனைத்தும் துவங்கியது.
134/6 என்று இருந்த போது சைமன்ட்ஸின் மட்டையில் பட்டு பெரிய அளவில் திரும்பி தோனியிடம் செல்கிறது. அது(பக்னர்) நாட் அவுட். பிறகு 48ல் கும்ப்ளே பந்தில் ஸ்டம்ப்டு. ஆனால் ஆட்ட நடுவர் நாட் அவுட் என்று கூறுகிறார். பிறகு அதே சைமன்ட்சிற்கு 148ல் ஹர்பஜன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனபோது தோனி கதறியும் 3ம் நடுவரை அழைக்கவில்லை நம் வயதான பக்னர்.
மீண்டும் 2வது இன்னிங்சில் அனில் கும்ப்ளே பந்தில் சைமன்ட்ஸ் முதல் பந்திலேயே நேராக காலில் வாங்கினார், மீண்டும் நாட் அவுட் என்றார் பக்னர். மைக் ஹஸ்ஸியிற்கு அதேபோல் ஒரு அவுட் மறுக்கப்பட்டது. இவையெல்லாம் தாண்டி டெஸ்டை வென்றிருக்க வேண்டிய அணி பான்டிங்கின் கோழைத் தனமான தாமத டிக்ளேருக்கு பிறகு டிரா செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு அடி மேல் அடி கொடுத்தனர் நடுவர்கள் இருவரும்.
ராகுல் திராவிட் மட்டையை ஒளித்துக் கொண்டு பந்தை விட்டு விடும்போது பேடில் பட்டு செல்வது ஊருக்கே தெரிகிறது, ஆனால் நடுவர் காதுகளுக்கு மட்டும் அது மட்டையில் பட்டதாக தெரிந்தது. திராவிட் வெறுப்புடனும், ஒரு நையாண்டி சிரிப்புடனும்தான் சென்றார்.
பாண்டிங்கை கேட்டு அவுட் கொடுத்த நடுவர்!
கங்கூலியை அவுட் ஆக்கிய விதம் கிரிக்கெட் வரலாற்றிலேயே கேலிக்குறியதாகும். கிரிக்கெட்டையும், ஆட்ட உணர்வையும், போட்டியை நடத்தும் நடுவர்கள் மீதுள்ள மரியாதையையும் குலைப்பதாக அமைந்தது.
webdunia photo
FILE
கிளார்க் கேட்சை பிடிக்கவில்லை (அதற்குள் பந்து மைதானத்தை தொட்டு விடுகிறது) என்பது உறுதியாக தெரிகிறது. கங்கூலி செல்லாமல் நின்று கொண்டிருக்கிறார். 3வது நடுவரிடம் கேட்காமல், ரிக்கி பாண்டிங்கிடம் அவுட்டா என்று கேட்கிறார். பாண்டிங் அவுட் என்று விரலை உயர்த்துகிறார் இவரும் அவுட் கொடுக்கிறார்.!
அப்போதே அனில் கும்ளே போட்டியை கைவிட்டிருக்க வேண்டும். எல்லாம் ஒரு திட்டமிட்ட சதிவலையாக இருப்பதை புரிந்து கொண்டிருக்கவேண்டும் கும்ளே. ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தை மதிப்பதாலும், கிரிக்கெட் உணர்வுக்கும் பார்வையாளர்களுக்கும், ஏன் நடுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மரியாதை கொடுத்து கும்ளே அவ்வாறு செய்யவில்லை. ஆனால் இது போன்ற ஒரு நாளில் கங்கூலியோ, பேடியோ, காவஸ்கரோ பொறுப்பில் இருந்திருந்தால் ஆட்டம் கைவிடப்பட்டிருக்கும். கும்ளே பிறகு கூறியதுபோல் ஆட்ட உணர்வுடன் ஆடியது ஒரே அணிதான், அது இந்திய அணிதான் என்பது உறுதி.
தோனி ஒரு பந்தை ஆட அது கால்காப்பிலும் மட்டையிலும் பட்டு பாண்டிங்கிடம் சென்றது. பாண்டிங் பிடித்து விட்டு பந்தை நன்றாக தரையில் வைத்து அழுத்துகிறார். அது அவுட் தரப்படவில்லை என்று ஆவேசமுற்றார் அவர். அது நோ-பால் அது கவனிக்கப்படவில்லை. மேலும் 2வது இன்னிங்சில் வாசிம் ஜாஃபர் அவுட் ஆனது ஒரு நோ-பால். ராகுல் திராவிட் ஸ்லிப் திசையில் கொடுத்த கேட்ச் தவறவிடப்பட்டது. ஆனால் அது ஒரு நோ-பால் என்று பிறகு ரீ-ப்ளேயில் தெரிய வந்தது.
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, டிரா செய்ய போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆர்.பி.சிங்கிற்கு ஒரு எல்.பி.டபிள்யூ. என்று மோசடி தீர்ப்பு கொடுத்தது அதிர்ச்சியின் உச்ச கட்டம்.
3 ஸ்டம்புகளுக்கும் மிகவும் வெளியே செல்லும் பந்தை விட்டு விடும் முடிவில் அவர் காலை நகர்த்த பந்து பேடை தாக்குகிறது. அப்போதும் 3 ஸ்டம்ப்களும் தெரிகிறது. ஆனால் எல்.பி.டபிள்யூ!
இது என்ன சர்வதேச கிரிக்கெட்டா? அல்லது நம் ஊர்களில் விளையாடப்படும் சூதாட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் டோர்னமென்டா? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும். தெரு கிரிக்கெட் கூட ஒரு குறைந்த பட்ச நியாய உணர்வுடன் விளையாடப்படுகிறது.
இதுதான் ஆஸ்ட்ரேலிய பாரம்பரியமாம்!
webdunia photo
FILE
ஆம்! ஸ்டீவ் வாஹ் சொல்வது போல் இது பண்பாட்டு தொடர்பான விஷயம். ஆஸ்ட்ரேலியாவில் தெருக் கிரிக்கெட்டிலும் இதுபோன்ற மோசடிகள் உண்டு என்று கூறுகிறார் வாஹ். ஆனால் அதை மோசடி என்று கூறவில்லை. இது போன்றுதான் இங்கு வளர்க்கப்படுகிறார்கள். இதனை பயணம் மேற்கொள்ளும் அணிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார், வாஹ். அதேபோல் ஹர்பஜன் சிங்கை வசை பாடும் ஆஸ்ட்ரேலிய வீரர்களை இந்தியா வரும்போது கடுமையாக தாக்கி, இந்தியாவில் இப்படித்தான் வசைகளை எதிர்கொள்வர், ஒரு 10,000 ஆண்டு கலாச்சாரம் இங்கு இப்படித்தான் இதனை ஆஸ்ட்ரேலியா இங்கு வருவதற்கு முன் புரிந்து கொள்ளவேண்டும் என்று சுனில் காவஸ்கர் கூற முற்படுவாரா என்பதே கேள்வி.
முரளிதரனை இழிவு படுத்தியது ஆஸ்ட்ரேலியாவே. பாகிஸ்தான் அணியை ஏமாற்றுக்காரர்கள் என்று கூறியது ஆஸ்ட்ரேலிய நடுவர் டேரல் ஹேர். இந்தியாவின் ஹர்பஜன் சிங் த்ரோ செய்கிறார் என்றும் தற்போது நிறவெறி பேசுகிறார் என்றும் அபாண்டக் குற்றச்சாட்டையும், ஒரு கீழ்த்தரமான வெற்றியை முன் கூட்டி தீர்மானித்து மோசடி செய்ததும் ஆஸ்ட்ரேலிய அணியே.
இதற்கெல்லாம் பதில் ஆஸ்ட்ரேலிய பயணத்தை ஆசிய கிரிக்கெட் நாடுகள் பகிஷ்காரம் செய்வதே.
இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு இல்லாமல் அடுத்த டெஸ்ட் போட்டியை ஆடினால், அதுவும் இதே நடுவர்களைக் கொண்டு ஆடினால், நடுவர்கள் ஒரு சில இடங்களில் ஃபீல்டிங் செய்து சில கேட்ச்களை பிடித்தாலும் பிடிப்பார்கள். அந்த தமாஷும் நடக்கலாம்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நியூசீலாந்து நடுவர்கள் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் செய்த மோசடிகளை விஞ்சி விட்டது சிட்னி டெஸ்ட் மோசடிகள்.
ஆஸ்ட்ரேலிய அணிக்கு சாதகமாக செயல் பட்டதன் மூலம். ஆஸ்ட்ரேலியா எங்கு சென்றாலும் தங்களுக்கு ஷான் டெய்ட் இருக்கிறாரோ, பிரட் லீ இருக்கிறாரோ தெரியாது, ஸ்டீவ் பக்னரும், மார்க் பென்சனும் இருந்தேயாகவேண்டும் என்று அடம் பிடிக்கலாம். ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக் குழு தலைவர் ஆண்ட்ரூ ஹில்டிச் தன் அணிக்காக நடுவர்களையும் தேர்வு செய்து அனுப்பலாம்.
மொத்தத்தில் வெட்கக் கேடான வெற்றி. ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டில் இது மற்றுமொரு கறுப்பு தினம். இது கிரிக்கெட் அல்ல. ஆஸ்ட்ரேலிய வெற்றிக்காக முன் கூட்டியே ஆஸ்ட்ரேலிய வாரியம், வெள்ளை ஆதிக்க ஐ.சி.சி., பேரம் பேசப்பட்ட நடுவர்கள் ஆகியோர் திறம்பட இயக்கிய நாடகமே.