முதல் நாள் : ஆஸ்ட்ரேலியா ஆடியது! நடுவர்களும் ஆடினர்!
புதன், 2 ஜனவரி 2008 (16:07 IST)
webdunia photo
WD
சிட்னி கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சாதகமாக முடிந்தாலும், அந்த சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் இன்றைய நடுவர்களான மார்க் பென்சன், வயதான ஸ்டீவ் பக்னர் ஆகியோர்களே என்றால் அது மிகையாகாது.
இந்தியாவின் சோகம் காலையில் தொடங்கியது. அதாவது ஜாகீர் கான் குதிகால் காயம் காரணமாக ஆடாமல் போனது ஆஸ்ட்ரேலியாவிற்கு சாதகமாக அமைந்தது. ஏனெனில் 134/6 என்ற நிலையில் அவர்களை ஜாகீர் இருந்திருந்தால் 200 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருக்க முடியும். எனவே ஜாகீர் இல்லாதது ஒரு பெரிய அதிர்ச்சி.
அடுத்த அதிர்ச்சி மீண்டும் அதே துவக்க வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது. திராவிடின் பேட்டிங் ஃபார்ம் போய்விடவில்லை. அவரது மனம்தான் அவரது முதல் டெஸ்ட் வீழ்ச்சிக்குக் காரணம் என்று பலர் எழுதியும், கூறியும் வருகின்றனர். ஆனால் மன ரீதியாக பலமில்லாத நிலையிலிருந்து வெளியே வருவது கடினம். ஃபார்ம் இல்லாவிட்டால் வலைப் பயிற்சியில் கூடுதல் நேரம் ஈடுபட்டால் போதுமானது. எனவே மனம்தான் காரணம் அதிலிருந்து அவர் வெளியே வந்து விடுவார் என்பது எந்த வித நிரூபணத்திற்கும் கட்டுப்படாதது.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டக்களம் துவக்கத்தில் நன்றாக எழும்பும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனாலேயே ஃபில் ஜாக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேத்யூ ஹெய்டனுக்கு விழுந்த பந்து அவர் நிற்கும் நிலையையே மாற்றியது. அந்த பந்தை சந்திக்கும்போது அவர் நேராக ஆக்கப்பட்டார். பந்து லேட் ஸ்விங் ஆகி விளிம்பை தட்டியது. அவர் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் பாண்டிங் களமிறங்கினார். அப்போது துவங்கியது நடுவரின் திருவிளையாடல். கங்கூலி வீசிய பந்து ஒன்று லெக் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே சென்றது. பாண்டிங் அதனை ஃப்ளிக் செய்தார் ஆனால் அது தோனியிடம் கேட்சாக மாறியது. இந்திய வீரர்கள் அனைவரும் கடுமையாக முறையீடு செய்தனர். நடுவர் மார்க் பென்சன் விரலை உயர்த்த மனம் வராது சுவர் போல் நின்றிருந்தார். மொத்த அணியும் ஏமாற்றம் அடைந்தது. அப்போது பான்டிங் ஆட்டமிழந்திருந்தால் ஆஸ்ட்ரேலியா 45/3 என்று ஆகியிருக்கும். புதிய பந்தில் சைமன்ட்ஸ் தற்போது ஆடிய ஆட்டத்தை ஆடியிருக்க முடியாமல் தவித்து ஆட்டமிழந்திருப்பார்.
பந்து பாண்டிங்கின் மட்டையில் பட்டதை ரீ-ப்ளே எடுத்துக் காட்டியது. யுவ்ராஜ் சிங்கிற்கு மெல்போர்ன் டெஸ்டில் அவுட் இல்லாததை அவுட் கொடுத்தபோது அவர் வெறுப்படைந்து போனது பெரிய விஷயமாக்கியது நடுவர்கள் குழு என்பது நினைவுக்கு வருகிறது.
webdunia photo
FILE
அதன் பிறகு பாண்டிங்கை சரியான உத்தி மூலம் ஹர்பஜன் வீழ்த்தினார். முதலில் ஸ்டம்ப்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார் தோனி. ஆனால் உணவு இடைவேளை முடிந்து, பாண்டிங் ஹர்பஜன் சிங் பந்துகளை ஃபைன் லெக் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு ஒரு ரன்னாக எடுத்து தவிர்த்து வந்தார். உடனே அனில் கும்ப்ளே ஷாட் லெக், ஷாட் மிட்விக்கெட், ஒரு மிட் விக்கெட் மற்றும் ஒரு மிட் ஆன் என்று பாண்டிங்கை நெருக்கினார்.
சுலபமாக சிங்கிள் எடுத்து வந்த ஷாட் ஃபைன் லெக் திசையில் ஒரு வீரரை நிறுத்தியவுடன் அவர் ஆன் சைடு விளையாட்டை தவிர்க்க நினைத்து நேராக ஆட முற்பட்டார். அப்போதுதான் ஹர்பஜனின் பந்து பான்டிங்கை வீழ்த்தியது. முன்னர் செய்த தவறுக்கு பரிகாரம் தேடும் வகையில் பாண்டிங் மட்டையின் உள்விளிம்பில் பட்டு கால்காப்பில் பட்ட பந்திற்கு எல்.பி.டபிள்யூ. என்று மார்க் பென்சன் யோசிக்காமல் விரலை உயர்த்தினார். ஆனால் அது முன்னர் கொடுக்காத அவுட்டிற்கு அவர் மேற்கொண்ட பரிகாரமே. இப்போது பாண்டிங் நாட் அவுட் என்று யாராவது அவரிடம் தெரிவிப்பார்கள் இதற்கு பரிகாரமாய் இந்திய வீரர் ஒருவரை அவுட் கொடுத்து மார்க் பென்சன் பரிகாரம் தேடலாம்.
webdunia photo
FILE
134/6 என்று சரிந்து கொண்டிருந்த ஆஸ்ட்ரேலியாவை சைமன்ட்சும், ஹாக்கும் பலமான நிலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இதில் ஹாக்கின் ஆட்டமே பாராட்டத்தக்கது. சைமன்ட்சிற்கு நடுவர்கள் உதவி புரிந்ததால், அதிரடி ஆட்டம் ஆடினார். தனக்கு இன்று அவுட் கொடுக்கப்படமாட்டாது என்று அவர் உறுதியடைந்தது போல்தான் ஆடினார்.
முதலில் 30 ரன்களில் சைமண்ட்ஸ் ஆடிக் கொண்டிருந்தபோது இஷாந்த் ஷர்மா வீசிய பந்து இன்ஸ்விங்காகி பிறகு தாமதமாக விலகிச் சென்றது. பந்து நன்றாக எழும்பியது. சைமன்ட்ஸ் அதனைப் போய் மட்டையால் தொட்டார், மறுபடியும் ஆக்ரோஷமான முறையீடு அவுட் மறுக்கப்பட்டது. இம்முறை வயதான நடுவர் ஸ்டீவ் பக்னர் இந்த கைங்கரியத்தை செய்தார்.
சரி இது போகட்டும்! 48 ரன்களில் சைமன்ட்ஸ் மீண்டும் கும்ப்ளே பந்தில் ஸ்டம்ப்டு செய்யப்பட்டார், இது இன்னும் விசேஷம்! கள நடுவர் 3ம் நடுவரை அழைத்தனர். அவர் தனது 3500 கோணங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ச்சி செய்து கிரீசிற்குள் நேரத்தில் காலை வைக்காத சைமன்ட்சிற்கு அவுட் இல்லை என்று மறு வாழ்வு கொடுத்தார். ஆஹா! என்னே! அவரது தயாள குணம். ஆனால் கில்கிறிஸ்ட் முறையீடு செய்தால் அது மட்டையை விட்டு ஒரு மைல் தள்ளி சென்றாலும் அவுட். ஏனெனில் அவர் "நேர்மையானவர்" என்று நடுவர்கள் நம்புகின்றனர்.
அதன்பிறகு சதமெடுப்பதற்கு முன் கும்ளே பந்தில் சைமண்ட்ஸ் எல.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் பக்னர் அவுட் தரவில்லை.
250 ரன்களுக்கு சுருண்டிருக்க வேண்டிய ஆஸ்ட்ரேலியா 376 ரன்களை குவித்துள்ளது என்றால் அதற்கு நடுவர்களின் அராஜகமான தீர்ப்புகளே காரணம். இனி என்ன ஆஸ்ட்ரேலியா ஒரு நல்ல ரன் எண்ணிக்கையை எட்டிவிட்டால், ஓரிரண்டு இந்திய பேட்ஸ்மென்களுக்கு சூட்சமமாக நாட் அவுட்டை அவுட் கொடுத்தால் முடிந்தது கதை. சச்சின் சிட்னி மைதானத்தில் வைத்திருக்கும் சராசரி 249! கடந்த முறை இவரும் லக்ஷ்மணும் 353 ரன்களை சேர்த்தனர். ஒரு நாள் முழுதும் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடினர். இந்த நினைவு பாண்டிங்கிற்கு இல்லாமலா இருக்கும். அனேகமாக இவர்களில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ நடுவர் மூலம் மோசடி வலை விரிக்கப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
webdunia photo
FILE
இன்று ஸ்டார் கிரிக்கெட் சானலில் சுனில் காவஸ்கர் வர்ணனை செய்தபோது ஆஸ்ட்ரேலிய பயணங்களில் நடுவர்களின் திருவிளையாடல் குறித்து கூறிய கருத்து சிந்தனைக்குரியது:
"இந்த சந்தர்ப்பம் என்றில்லை, ஆஸ்ட்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு இது நடந்திருக்கிறது என்பது வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு நெருக்கமான முடிவும், நெருக்கடியான முடிவும், சாம்பியன் அணிக்கே சாதகமாக அமைகிறது, இது அவர்கள் கிரிக்கெட்டை ஆடும் முறையாலா, அவர்கள் நடுவர்களிடம் முறையீடு செய்யும் விதத்தினாலா... தெரியவில்லை..."