பீட்டர் ரீபக் வாதம் நியாயமானதா?

வியாழன், 31 ஜனவரி 2008 (11:41 IST)
webdunia photoFILE
பீட்டர் ரீபக் - இவர் பெயரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்து நாளிதழில் இவரது கிரிக்கெட் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மற்றபடி ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகளில் இவரது கிரிக்கெட் கருத்துகள் வெளிவந்துள்ளன. நீண்ட நாட்களாக எழுதி வரும் ஒரு மதிக்கத்தக்க எழுத்தாளர்தான் இவர்.

சிட்னி டெஸ்டில் ஆஸ்ட்ரேலியா பெற்ற வெற்றியையும் அதன் பிறகு ஹர்பஜன் விவகாரத்தில் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் நடந்து கோண்ட முறையையும் கடுமையாக சாடி, "ரிக்கி பாண்டிங்கை நீக்கவும்" என்று அதிரடியாக எழுதியதன் மூலம் பிரபலமடைந்தார். அவரது அந்த குறிப்பிட்ட கட்டுரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, பெர்த் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய வீரர்களின் நடத்தையையும் அடியோடு மாறியதற்கு ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிட்னி டெஸ்டில் நடந்த அக்கிரமங்களை வர்ணித்து சாடிய பீட்டர் ரீபக், "இந்திய அணி இன்னமும் தங்களது பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு செல்லாமல் இருப்பது யார் செய்த அதிர்ஷ்டமோ" என்று எழுதினார். மேலும் "ஹர்பஜன் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் அவர் ஒரு குடும்பத் தலைவர், அவர் மீது ஆஸ்ட்ரேலிய மூத்த வீரர்கள் வேட்டை நாய் போல் பாய்ந்து குதறுவது நியாயமாகாது" என்று எழுதினார்.

webdunia photoWD
ஆனால் நேற்று ஹர்பஜன் மேல்முறையிட்டு விசாரணையில் நிறவெறி குற்றச்சாட்டு பொய் என்று தெரிந்த பிறகு ஹர்பஜன் விடுவிக்கப்பட்டார். இது குறித்தும் தனது பேனாவிலிருந்து மையை உதறிவிட்டுள்ள பீட்டர் ரிபாக் திடீரென "நீதியே உன் விலை என்ன?” என்று போலி தார்மீக ஆவேசம் கொள்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை வைத்துக் கொண்டு ஆஸ்ட்ரேலியாவை மிரட்டுவதாகவும், இதற்கு ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் பணிந்து விட்டதாகவும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் புலம்பல் ஒன்றை வன்முறையாக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன. அந்த புலம்பல்களை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும் பத்திரிக்கை தர்ம அணித் தலைவராக பீட்டர் ரீபக் இருந்து வருகிறார்.

அதாவது இந்தியா சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து, மெல்போர்னில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களையெல்லாம் அடிலெய்டிற்கு வரவழைத்து தீர்ப்பு சாதகமாக இல்லையெனில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து நீதித் துறையை மிரட்டியதாம். இதனால் ஏற்படும் வியாபார நஷ்டங்களுக்கு அஞ்சி ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் சமரசத்திற்கு உடன்பட்டு குற்றச்சாட்டின் தீவிரத்தை குறைத்துக் கொண்டதாம். இதுதான் பீட்டர் ரீபக்கின் வாதம். இது போன்று மிரட்டுவது இந்தியாவிற்கு நியாயமா தர்மமா என்றெல்லாம் புலம்பியுள்ளதோடு, இந்திய கிரிக்கெட் அதிகாரிகளின் நடத்தை நீதித் துறைக்கே ஒரு சவால் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அல்லது அதன் பண பலம் மற்றும் அதனால் விளையும் அதிகாரம் ஆகியவற்றிடமிருந்து சட்டத்தை காப்பாற்ற வேண்டுமாம். இதுதான் பீட்டர் ரீபக்கின் வாதம்.

இவ்வளவு வாய் கிழிய பேசும் இந்த பீட்டர் ரீபக் யார்?

1956ம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டில் அன்னார் எழுந்தருளினார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராக அன்னார் வளர்த்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து உள்ளூர் கவுண்ட்டி அணியான சோமர்செட் அணியின் தலைவராக சில ஆண்டுகள் இருந்துள்ளார். இவர் சோமர்செட்டின் கேப்டனாக இருந்தபோது அந்த அணிக்கு ஆடிவந்த விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஜோயல் கார்னர் ஆகியோருக்கு மீண்டும் ஒப்பந்தம் அளிக்கக் கூடாது என்பதில் தீவிரம் காட்டி வெற்றியும் பெற்றார். விவ் ரிச்சர்ட்சிற்கு ஒப்பந்தம் அளிக்காததால் கோபமடைந்த இயான் போத்தம் சோமர்செட் அணியிலிருந்து விலகி வொர்ஸ்டர்ஷயர் அணியுடன் இணைந்தார்.

அவர் சோமர்செட் கேப்டனாக இருந்த போது ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் கடைசியில் அந்த கிளப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர கிரிக்கெட்டிலிருந்து அன்னார் ஓய்வு பெற்ற பிறகு, வானொலி வர்ணனை, பத்தி எழுதுதல் என்று தனது அறிவார்த்த உந்துதல்களுக்கு தீனி போட்டு வந்தார். இவர் கிரிக்கெட் பயிற்சியும் அளித்து வந்தார். அப்போது 3 இளம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் பயிற்சியுடன் கூடவே இன்னொரு கொடூரமான செயலையும் செய்துள்ளார். 3 இளம் வீரர்களையும் பிரம்பால் அடித்துள்ளார் ரீபக். 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை அந்த 3 வீரர்களுக்கும் இவர் பயிற்சி அளிக்கும் போது இந்த கொடுமையை செய்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

அவர் பிரம்பால் அடித்ததை நீதிபதியிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது அந்த 3 பேரிடமும் இவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக 3 குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுப்பப்பட்டது. ஆனால் பொதுவாக அடித்ததை மட்டுமே இவர் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிராகாம் ஹியூம் ஜோன்ஸ், பீட்டர் ரீபக்கின் நோக்கங்கள் சுத்தமானவை என்று தான் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக வழக்காடிய இயன் ஃபென்னி இது குறித்து கூறுகையில், அந்த 3 வீரர்களையும் பிரம்பால் அடித்ததோடு, அடித்த இடத்தில் ஏற்பட்ட தழும்பையும் காண்பிக்கச் சொல்லி பார்த்திருக்கிறார் ரீபக் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது நடந்து 8 ஆண்டுகளுக்குள் சட்டத்தின் புனிதத்தையும், நீதியின் உண்மையையும் பற்றி இவர் அங்கலாய்க்கிறார் என்றால் நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது? தனி மனித ஒழுக்கமும், அறமும் இல்லாத ஒருவர் குறைந்தது அதைப்பற்றியெல்லாம் பேசாமலாவது இருப்பதுதான் சிறந்தது. ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் போல் மறதியுடன் அனைவரும் இதனை கண்டு கொள்ளாமல் விடமாட்டார்கள் என்பதை பீட்டர் ரீபக் உணரவேண்டும்.

இந்த பண பலம், அதிகாரம் ஆகியவை பற்றி ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்டாக வேண்டும். தவறான குற்றச்சாட்டை பலவீனமான முறையில் எழுப்பி புகார் செய்து, சாட்சியங்கள் இல்லாமல் மண்ணோடு போன அந்த புகாரினால் தங்கள் "மரியாதை" போய்விட்டதாக எண்ணுவது, பலவீனமான மனோ நிலையின் புலம்பல் வெளிப்பாடு. தங்கள் தவறுக்கு தங்களிடமே தீர்வு காணாமல் அடுத்தவர்கள் மீது பழி சுமத்துவது, எதிரிகளை உருவாக்குவது, மேலும் இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, மேற்கத்திய வெள்ளை ஆதிக்கத்தையும், வாழ்க்கை முறையையும் சகல துறைகளிலும், சகல நாடுகளிலும் வன்முறையாக செலுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்த நாடுகள் தற்போது புதிதாக எழுந்துள்ள இந்திய பண பலம் மற்றும் அதிகாரம் (கிரிக்கெட்டில் மட்டுமல்ல) குறித்து பீறிட்டு எழுவது கசப்பான பொறாமையே?

வெள்ளையர்கள் வாழ்ந்த முறை, அவர்கள் உருவாக்கிய ஒரு வன்முறை பண்பாடு அவர்களுக்கு எதிராகவே திரும்பும் போது புதிய சக்திகளை முற்றும் தீமை என்றும், முற்றிலும் எதிரி என்றும், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவர்கள் போன்ற பிம்பங்களை கட்டமைப்பது ஆகியவை அவர்களது சுயத்தின் ஆழமான இடங்களில் புதைந்திருக்கும் அசிங்கமான பகுதியே. இந்த குற்றவுணர்விலிருந்தும், குற்றங்களிலிருந்தும் தன்னை நீக்கி‌க் கொள்ள தன்னிடமேதான் விடைகளை ஒரு நாகரீகம் தேட வேண்டுமே தவிர மீண்டும் பழைய தவறையே செய்து மற்றொரு எழுச்சியுறும் அதிகாரத்தை முற்றிலும் தீமை என்று கூறுவது ஒரு போதும் நியாயமாகாது.

ஹர்பஜன் விவகாரத்தில் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி ஹேன்சன் தனது தீர்ப்பின் அனைத்து அம்சங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் இறுதிப் பகுதியில் பீட்டர் ரீபக் உள்ளிட்ட ஆஸ்ட்ரேலிய ஊடகங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மிரட்டியது, ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் பணிந்து போனது என்ற வாதங்களையெல்லாம் உடைத்த அவர், சாட்சியங்கள் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டுள்ளதையும், அறிவு‌ப்பூர்வமாக புகார் எழுப்பவில்லை என்பதையும் காட்டியுள்ளார்.