நேற்று தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மிகப்பெரிய தோல்வி அடைந்தது. ஆனால் இந்தத் தோல்வியை இலங்கை அணி வீரர்கள் பெரிதாகக் கொண்டாடி வரும் வேளையில் நடுவர் மோசடிகள் பற்றி அவர்கள் குறிப்பிடத் தவறுகின்றனர்.
சேவாக், தினேஷ் கார்த்திக், ரெய்னா, கடைசியில் யுவ்ராஜ் இந்த தீர்ப்புகளில் 3 தீர்ப்புகளை இலங்கை நடுவரும் முன்னாள் வீரருமான தர்மசேனா வழங்கினார்.
ஒன்றை பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரௌஃப் வழங்கினார்.
முதலில் தீர்ப்பு ஏற்பட்ட விதங்களைப் பார்ப்போம்:
சேவாகிற்கு குலசேகரா இன்ஸ்விங்கர் ஒன்றை வீச அதனை சேவாக் அடிக்க முயன்றார் பந்து கால்காப்பில் பட்டது உடனே முறையீடு உடனே அவுட்.
FILE
ஆனால் சேவாக் பொதுவாக காலைக் குறுக்காகப் போட்டு ஆடுபவர் அல்ல. கவர் டிரைவ் ஆடும் போது கூட அவர் நின்ற நிலையில்தான் விளாசுவார். லெக்ஸ்டம்புக்கு நேராக சேவாக் வாங்கினார் என்றாலும் பந்து மேலும் ஸ்விங் ஆகிறது. அவரது மிடில் ஸ்டம்பும், ஆஃப் ஸ்டம்பும் நன்றாகத் தெரிகிறது. பந்து எழும்பிய உயரமும் சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஆனால் தர்மசேனாவுக்கு சந்தேகமே வரவில்லை. கையை உயர்த்தினார். ரன்களை எடுத்து வெற்றி வாய்ப்பைப் பெற்றுத் தரும் சேவாகை ஒழித்துவிட்டால் பிறகு இந்தியாவை கட்டுப்படுத்திவிடலாம் என்பதுதான் உள்திட்டம்.
அடுத்ததாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டார் ஆனால் பந்து மட்டையில் படவில்லை.
சுரேஷ் ரெய்னா தீர்ப்பு மிகவும் பரிதாபம். ஆட்டமிழப்பதற்கு முதல் ஓவரில் அவர் ஒரு பந்தை எட்ஜ் செய்தார் என்று இலங்கை வீரர்கள் அனைவரும் அதாது டீப் தேர்ட்மேன் திசையில் உள்ளவர் கூட தனக்கு அந்த மெல்லிய எட்ஜ் காதில் விழுந்தது என்பது போல் கூப்பாடு போட ரௌஃப் அதனை நாட்-அவுட் என்று கூறினார். அப்போது இலங்கை வீரர்கள் நடுவர் ஏதோ தவறு செய்தது போல் தலையில் கையை வைத்துக் கொண்டு நடிப்பு ஒன்றைப் போட்டனர்.
இதன் பிறகு அடுத்த ஓவரில் பந்து அவரது மட்டையின் உள்விளிம்பைக் கடந்து சென்றது. இதற்கு மீண்டும் இலங்கை வீரர்கள் உரத்த குரல் எழுப்ப நடுவர் அவுட் கொடுத்தார். அதாவது முந்தைய முறையீடு நியாயமானது ஆனால் நடுவர் தவறு செய்து விட்டார் என்ற ஒரு பாவனையை ஏற்படுத்தி நடுவரை அச்சுறுத்தியதால் அதற்கு அடுத்ததாக இந்த நாட்-அவுட்டை அவுட் என்று கையை உயர்த்தினார்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் இரண்டு முறையுமே ரெய்னாவின் மட்டைக்கும் பந்துக்கும் தொடர்பில்லை என்பதை ஹாட்-ஸ்பாட் தொழில் நுட்பம் காண்பித்துவிட்டது. எனவே இதுவும் ஒரு திட்டமிட்ட வெளியேற்றலே.
இந்தத் தீர்ப்புகளினால் நிலைகுலைந்த இந்திய அணி, மற்ற வீர்ர்களின் மோசமான் ஆட்டமும் இணைய திக்கித் திணறியது. ஆனால் யுவ்ராஜ் சிங் ஏதோ சுமாராக ஆடினார். 3-வது பவர் பிளே எடுக்கப்பட்ட பிறகு அவர் அபாரமான ஒரு சிக்சரையும், ஒரு பவுண்டரியையும் அடித்து சற்றே அச்சுறுத்தினார்.
அவ்வளவுதான் உடனடியாக மலிங்கா வீசிய யார்க்கருக்கு அவருக்கும் கையை உயர்த்தினார் நடுவர் தர்மசேனா. பந்து ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி பேடில் படுகிறது ஆனால் வெளியே செல்கிறது எனும்போதாவது அவுட் கொடுப்பதற்கு ஒரு தர்க்கம் உள்ளது என்று கூறலாம்.
ஆனால் பந்து பிட்ச் ஆனது லெக்ஸ்டம்பிற்கு வெளியே, யுவ்ராஜ் வாங்கியதும் லெக்ஸ்டம்பிற்கு வெளியே ஆனால் அவுட். இது மிகவும் அபத்தமான, முட்டாள் தனமான தீர்ப்பாக அமைந்து இலங்கை நடுவரின் உள்நோக்கத்தை பறை சாற்றுவதாய் அமைந்தது.
ஆட்டம் முடிந்து சங்கக்காராவிடம் இது குறித்து கேட்டபோது, நடுவர் தீர்ப்பை 3-வது நடுவரிடம் மறுமுறையீடு செய்யும் முறையை இந்தியாதான் ஏற்றுக்கொள்லவில்லை அதனால்தான் இப்படி நிகழ்கிறது என்றார். எதற்கு எதனை பதிலாக அளிக்கிறார் சங்கக்காரா?
தொழில்நுட்பத்தை ஏதோ மனிதன் மோசடி செய்ய முடியாது என்பது போலல்லவா இவர் பேசுகிறார். சேவாகிற்கு நேற்று நடுவர் கொடுத்த அவுட்டை அவர் 3-வது நடுவரிடம் முறையீடு செய்திருந்தாலும் அது ஸ்டம்ப்களைத் தாக்குவதாகச் செய்ய முடியாதா? அப்படித்தான் அந்த ரீ-ப்ளேயும் இருந்தது.
அது போல்தான் யுவ்ராஜ் சிங் அவுட். அதனையும் ஒருவர் மேலே இருந்து கொண்டு மோசடி செய்து பந்து ஸ்டம்ப்களுக்கு நேராக வந்தது என்று காண்பிக்கமுடியும். அதனால் சங்கக்காராவின் வாதம் செல்லுபடியாகாது.
மேலும் இதற்கு முன்னால் ஒரு தொடரில் கும்ளே தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கையில் விளையாடிய போது யு.டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்போதும் பல அவுட்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆனால் பாதிக்கப்பட்டது இந்திய அணியே. அதனால் தோல்வியும் தழுவியது. இலங்கை அணிக்கு எதிராக யு.டி.ஆர்.எஸ். தீர்ப்புகள் அப்போது இல்லை.
அதனால் தொழில் நுட்பம் மோசடி செய்ய முடியாதது என்றோ, அது வந்தால் கிரிக்கெட் தூய்மையடைந்து விடும் என்பதோ வெகுளித்தனமான வாதம் என்பதோடு அபாயகரமானதும் ஆகும். ஏனெனில் நாம் மேற்கூறியது போல் தொழில்நுட்பத்தையும் மோசடி நடக்கத் துவங்கியது என்றால் தவறுகளை நிரூபிக்கக் கூட வாய்ப்புகள் மறுக்கப்படும். இது தொழில்நுட்பத்தின் மோசமான ஒற்றை ஆதிக்கம் கிரிக்கெட்டை ஆக்ரமிக்க வாய்ப்பளிப்பதாகும்.
மோசமான நடுவர் தீர்ப்புகளுக்கு இலங்கை பெயர் பெற்றதுதான்!
பாகிஸ்தான் அணி 1986ஆம் ஆண்டு இலங்கையை தங்கள் நாட்டில் வீழ்த்திய பிறகு இலங்கை வந்தனர். (அப்போது பாகிஸ்தான் நடுவர்களும் மோசடி தீர்ப்புகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருந்தனர் என்பதையும் நாம் மறுக்கலாகாது.)
FILE
அந்தத் தொடரை இம்ரான் தனது கிரிக்கெட் சுயசரிதையில் 'அசிங்கமான தொடர்' என்று வர்ணித்தார்.
அர்ஜுனா ரணதுங்காவிற்கு ஒரு 6 அல்லது 7 அவுட்களையாவது நடுவர் ஃபெல்சிங்கர் தரவில்லை. இம்ரான் நேரே நடுவரிடம் சென்று "இதோ பாருங்கள் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளது அதிலும் நீங்களே நடுவர் பொறுப்பு வகிக்க நான் பொறுப்பு ரணதுங்காவுக்கு அவுட் உண்டா அல்லது இல்லையா? என்று கேட்டார்.
மேலும் நடுவர் ஃபெல்சிங்கர் பாகிஸ்தான் முறையீடு செய்த போதெல்லாம் இது ஒன்றும் பாகிஸ்தான் இல்லை என்று நையாண்டியும் செய்துள்ளார். நடுவர் மோசடியையும் மீறி அந்த டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் வென்றது.
ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசடிகள் இன்னும் மோசமான கட்டத்தை எட்டியது. ஜாவேத் மியாண்டாடிற்கு மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால் அவருக்கு கோபம் வந்தது. இலங்கை வீரர்களுடன் கைகலப்பு அளவுக்கு இது சென்றிருக்கும் ஆனால் மற்ற வீரர்கள் அதனை தடுத்தனர். மேலும் மியாண்டட் பெவிலியன் செல்லும்போது அவரை ஒரு ரசிகர் கல்லால் அடித்தார்.
இதையெல்லாம் இலங்கை ஊடகங்கள் ஒன்று கூட சுட்டிக்காட்டவில்லை என்று கூறிய இம்ரான் கான் பாகிஸ்தானிலோ மற்ற நாடுகளிலோ நடுவர் மோசடியாக இருந்தாலும் இது போன்ற ரசிகர்களின் அராஜகமாக இருந்தாலும் யாரவது ஒருவராவது இதனைக் கண்டித்து எழுதி விடுவார்கள். ஆனால் இலங்கையில் ஒருவர் கூட இதனைக் கண்டிக்கவில்லை என்று இம்ரான் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பிறகு அந்தத் தொடரைக் கைவிட இம்ரான் முடிவெடுத்தார். ஆனால் பாகிஸ்தான் அப்போதைய அதிபர் ஜியா-உல்-ஹக் தொடரை முடித்து விட்டு வருமாறு வலியுறுத்தியதால் தொடர்ந்ததாக இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா அங்கு சென்ற போதுதான் இலங்கை தன் முதல் டெஸ்ட் வெற்றியைப்பதிவு செய்தது. இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டன். அந்தத் தொடர் இம்ரான் கண்டதைவிட மோசமான நடுவர் தீர்ப்புகளை மட்டுமல்லாது நடுவர் என்ற பொறுப்பிற்கே இழுக்கு சேர்ப்பதாய் அமைந்தது.
இலங்கை பந்து வீச்சாளர்களின் நோ-பால் கண்டு கொள்ளப்படவில்லை. விக்கெட் கீப்பர் பிடித்த பந்துகளில் சில மட்டையின் விளிம்பில் பட்டு வந்ததே என்று சாதிக்கப்பட்டது. அதே தொடரில் ஒரு நாள் போட்டி ஒன்றில் தோல்விக்கு பயந்து மதியம் இரண்டு மணிக்கு விளையாடக்கூடிய வெளிச்சம் இருந்தும் நடுவர் போதிய வெளிச்சம் இல்லை என்று முடிவெடுத்தார்.
அதன் பிறகு 1993ஆம் ஆண்டு இந்தியா இலங்கை சென்ற போது தொடர்ந்து இந்திய வீரர்கள் நடுவர்களின் தரத்தைப் பற்றி புகார் எழுப்பியதாகப் பதிவாகியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக ஐ.சி.சி. நடுவர் குழுவில் இருந்த அசோக டி-சில்வா குறைந்தது 5 முறையாவது கங்கூலிக்கு மட்டும் மட்டையின் உள்விளிம்பில் பட்ட பந்திற்கு எல்.பி.டபிள்யூ. தீர்ப்பளித்திருப்பார். நடுவர்களின் தரம் இலங்கையில் மோசடியாகவும், மோசமாகவும் இருந்ததற்கு ஏகப்பட்ட சாட்சியங்கள் உள்ளன.
அதனால் சங்கக்காரா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடுவர் தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்யும் முறை இல்லை என்பதால் நடுவர் மோசடியாக தீர்ப்பளித்து விட முடியுமா என்ன? அல்லது தொழில் நுட்பத்தை இந்தியா ஏற்காததற்காக இந்திய அணிக்கு தண்டனை வழங்கத்தான் நடுவ்ர்களுக்கு உரிமை உள்ளதா?
இலங்கை அணியின் வெறுப்பு என்ன?
கடந்த சில தொடர்களாக இந்தியா இலங்கையை கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அனில் கும்ளே தலைமையில் நாம் இலங்கை சென்ற போது தொடரை இலங்கை 2-1 என்று கைப்பற்றியது. பின்பு அதே தொடரில் இந்தியா ஒரு நாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.
அதற்கு அடுத்த இலங்கை பயணத்தில் இந்தியா ஒரு நாள் தொடரில் அவர்கள் மண்ணிலேயே 4-1 என்று வெற்றி பெற்றது.
அதன் பிறகு இந்தியாவுக்கு இலங்கை பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் மண்ணைக்கவ்வியது.
இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் தோல்வியில் தொடங்கி கடைசியில் கோப்பையைக் கைப்பற்றியது.
தற்போதைய டெஸ்ட் தொடரில் இலங்கையின் வெற்றிக்கனவை சேவாகும் லஷ்மணும் தகர்த்து தொடரை 1-1 என்று சமன் செய்தனர்.
முத்தரப்பு ஒருநாள் தொடரில் சேவாக் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றபோது அவரை 99 ரன்களில் கேவலமாக நோ-பால் வீசி நிறுத்தியது. இது குறித்து உலகம் முழுதும் வீர்ர்களும், வர்ணனையாளர்களும் கிரிக்கெட் நோக்கர்களும் கடுமையாகக் கண்டித்தனர்.
இதனாலெல்லாம் இந்திய அணி மீது ஒரு வெறுப்பை இலங்கை வளர்த்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. சேவாக் நோ-பால் விவகாரமே இந்த வெறுப்பின் வெளிப்பாடுதான்.
இந்தப் பின்னணியில்தான் நேற்று எப்படியாவது வெற்றியைச் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேர்மையாக விளையாடி வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றி!