தெளிவான திட்டத்துடன் சீறியது தென் ஆப்பிரிக்கா!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (17:52 IST)
webdunia photoFILE
சென்னையில் சேவாக் முச்சதம் எடுத்து தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை நாலா பக்கமும் சிதற அடித்ததும், 2வது டெஸ்டில் எதிர்பார்ப்புகள் அதிகம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால் எதிர்பார்ப்புகளை அருமையான பந்து வீச்சுத் திட்டத்துடன் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இன்று முறியடித்தனர்.

துணைக் கண்டத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் இவ்வளவு குறைந்த ஓவர்களில் எந்த அணியும் ஆட்டமிழந்ததில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம்! 20 ஓவர்களில் எந்த அணியும் துணைக்கண்ட ஆட்டக்களங்களில் சுருண்டதில்லை. இந்த வகையில் இந்தியா இன்று புதிய சாதனை(!) புரிந்துள்ளது.

இந்த அளவிற்கு குறைவான ரன்களில் ஆட்டமிழக்குமாறு ஆட்டக்களத்தில் எந்த விதமான பூதமும் இல்லை இல்லை இல்லவே இல்லை.

சென்னையில் முழுவதும் பேட்டிங் சாதக ஆட்டக்களம் என்று தெரிந்து 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தது. இந்த களம் பந்து வீச்சிற்கு ஓரளவிற்கு சாதகம் என்று தெரிந்திருந்தும் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி.

ஆனால் ஒரு பேட்ஸ்மென் அதிகம் இருப்பதானால் மட்டும் இன்றைய இந்திய இன்னிங்சை உயிர்ப்பித்திருக்க முடியும் என்பது நம் மனக் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.

தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டிக்கு முன் ஷாட் பிட்ச் பந்துகளை பயன்படுத்தப்போவதாக கூறியிருந்தது. ஆனால் ஷாட் பிட்ச் பந்துகளை அவர்கள் அவ்வளவாக பயன்படுத்தவில்லை.

சென்னையில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் புதிய திட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி இன்று கடைபிடித்தது. அதாவது ஆஸ்ட்ரேலிய மண்ணில் நம் பந்து வீச்சாளர்கள் கடைபிடித்த அதே முறைதான்.

நல்ல அளவில் வீசி பந்தை சற்றே ஸ்விங் செய்வது. அதைத்தான் இன்று தென் ஆப்பிரிக்க வீச்சாளர்கள் செய்தனர்.

webdunia photoFILE
மக்காயா நிட்டினி சென்னையில் அதிவேகத்தில் வீசி அடி வாங்கினார். ஆனால் இன்று வேகத்தை குறைத்தார், நல்ல திசையில் துல்லியமான அளவில் சற்றே உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி ஸ்விங் செய்தார் அவ்வளவுதான். ஜாஃபர், லக்ஷ்மண், சேவாக், திராவிட், கங்கூலி என்று அனைவரும் பெவிலியனில்!

ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், ஆஸ்ட்ரேலியாவில் நம் வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்தபோது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களால் ஏன் அவ்வாறு செய்யமுடியவில்லை என்ற கேள்வி அங்கு எழுந்தது. அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது. ஏன் இந்திய பந்து வீச்சாளர்களால் ஸ்விங் செய்ய முடியவில்லை?

மாறாக, ஸ்விங் இருப்பதாக நினைத்துக் கொண்டு திசையையும் அளவையும் கோட்டை விட்டனர். இதனால் தென் ஆப்பிரிக்கா நல்ல துவக்கத்தை பெற்றது. சில வாரங்களுக்கு முன் ஸ்விங் பந்து வீச்சின் சுல்தான்கள் என்று வர்ணிக்கப்பட்ட இந்திய பந்து வீச்சு திடீரென ஸ்விங் செய்வதை மறந்து போயுள்ளது ஆச்சரியம்தான்.

webdunia photoFILE
இந்த களத்தில் ஹர்பஜன் பந்து வீச்சை பாராட்டியே ஆகவேண்டும். களத்தில் எந்த வித உதவியும் இல்லாமல் தன்னுடைய சாமர்த்தியத்தினாலேயே விக்கெட்டுகளை சாய்த்தார். ஃபிளைட் மாறுபாடு, பந்து விழும்போது இருக்கும் வேகத்திற்கும் காற்றில் மேலே வரும் போது இருக்கும் வேகத்திற்கும் நிறைய மாறுபாடுகள் செய்தார். அதில்தான் அவருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.

ஜாக் காலீஸ் இந்த போட்டியில் நிச்சயம் சதமடிக்கும் நோக்கத்துடன் களமிறங்கியிருப்பார். அவரை விரைவில் வீழ்த்தாமல் இந்திய அணிக்க்கு இந்த டெஸ்ட் போட்டியைக் காப்பாற்ற வழி ஏதும் இல்லை. ஏற்கனவே வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

200 ரன்கள் முன்னிலைக்குள் தென் ஆப்பிரிக்க அணியை கட்டுப்படுத்தி, அதன் பிறகு இந்திய வீரர்கள் 400 ரன்கள் அடிக்கவேண்டும், ஆட்டத்தின் இந்த நிலையில் இது ஒரு கனவாகவே தெரிகிறது.

புள்ளி விவரங்களும் இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இது வரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்த அணி எதுவும் அந்த டெஸ்ட் போட்டியை வென்றிருப்பது 5 முறைதான் நடந்துள்ளது. கடைசியாக இந்த அதிசயம் நிகழ்ந்தது 100 ஆண்டுகளுக்கு முன்பு 1907ல்தான். அப்போது தோற்ற அணி தென் ஆப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகால வரலாறு மீண்டும் நிகழ்த்தப்படுமா? கற்பனையிலாவது மிதப்போமே!