திராவிட் துவங்கினார்! பயந்தது நடந்தது!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (20:59 IST)
சமீப காலங்களாக பேட்டிங்கில் தடுமாறிவரும் ராகுல் திராவிடை மெல்போர்ன் டெஸ்டில் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கியதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் அணி நிர்வாகம் காதில் வாங்கவில்லை.

திராவிட் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினால் அது எப்படி எதிர் முனையிலுள்ள பேட்ஸ்மேனையும் பாதிக்கும் என்று நாங்களும் எழுதினோம். எது நடக்கக்கூடாது என்று பயந்தோமோ அது அப்படியே இன்று மெல்போர்னில் நடந்தது.

துவக்க ஆட்டக்காரராக பாதிக்கப்பட்டது ராகுல் திராவிட் மட்டுமல்ல, 343 ரன்களுக்கு போராடி ஆஸ்ட்ரேலிய அணியை சுருட்டிய இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் பாதிப்படைந்தது.

ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சு ஒன்றும் அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. ஜாகீர் கான், ஆர்.பி.சிங் ஆஸி. வீரர்களுக்கு வீசிய துவக்க ஓவர்களைக் காட்டிலும் ஆஸி. பந்து வீச்சு வீரியம் குறைவாகத்தான் இருந்தது. சாதாரண ஓவர்-பிட்ச் மற்றும் ஹாஃப் வாலி பந்துகளையே திராவிட் தடுப்பாட்டம் ஆடினார். ஒரு நேரத்தில் பார்வையாளர்களின் கேலிக்குள்ளானார் திராவிட்.

ஆம்! நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல் அவர் துவக்க வீரராக களமிறங்கினார். 66 பந்துகளில் தடவோ தடவென்று தடவி 5 ரன்களை எடுக்க கடும் சிரமப்பட்டு, கடைசியில் ஒன்றும் இல்லாத பந்திற்கு விக்கெட்டையும் பறி கொடுத்ததார், இதனால் மற்ற வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்ப நேரிட்டது.

5ம் நிலையில் களமிறங்கி இது வரை நன்றாக விளையாடி வந்த லக்ஷ்மண் முதல் நிலையில் இறங்கவேண்டியதாயிற்று. திராவிட் ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் அவர்கள் லக்ஷ்மணை நோக்கி தீவிரமாக வீசத் துவங்கினர். 22 ஓவர்களேயான ஒரு புதிய பந்தில் அவருக்கு வீசப்பட்டது போன்ற பவுன்சரை எந்த பேட்ஸ்மெனுக்கு வீசினாலும் அவர் ஆட்டமிழக்கவே செய்வார். அவ்வளவு கொடூரமான பந்து அது.

பிரட் லீ, ஜான்சன், கிளார்க் போன்றோரை அதுபோன்று பந்து வீசுவதற்கு தயார்படுத்தியதில் திராவிடின் ஆட்டம் பெரும் பங்கு வகிக்தது.

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக போர்ட் எலிசபெத் மைதானத்தில், எழும்பும் வேகமான ஆட்டக்களத்தில் மேற்கிந்திய துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் ஆடிய அதிரடி ஆட்டத்தால் அந்த அணி ஒரு மரியாதைக்குறிய முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நோக்கி தற்பொது சென்று கொண்டிருக்கிறது. கொடூரமான வேகப்பந்து வீச்சில் அவர் 49 பந்துகளில் 64 ரன்களை விளாசியதன் மூலம் ஓய்வறையில் அடுத்து களமிறங்க இருக்கும் வீரர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தார்.

கிட்டத்தட்ட கிறிஸ் கெய்லும், நமது சேவாகும் ஒரே மாதிரியாக ஆடக்கூடியவர்களே. திராவிட் அவரது வழக்கமான நிலையில் களமிறங்க, சேவாக் துவங்கியிருந்தால் இது போன்ற ஒன்று நடக்க வாய்ப்புகள் ஏராளம். திராவிட் விளையாடிய 66 பந்துகளையும் சேவாக் விளையாட முடியாது போகலாம். ஆனால் அவர் 30, 35 பந்துகளை சந்தித்திருந்தாலே ஒரு 50 ரன்களை வேகமாக அடித்திருப்பார். அது ஒரு உற்சாகமான துவக்கமாக இருந்திருக்கும். அத்தனை வாய்ப்புகளையும் தற்போது இந்தியா இழந்ததோடு மெல்போர்ன் டெஸ்டில் தோற்கும் அவல நிலைக்கு சென்றுள்ளது. இதற்கான முழு பொறுப்பை அணி நிர்வாகமே, கேப்டனே ஏற்கவேண்டும்.

உலகின் அதி கொடூர வேகப்பந்து வீச்சிற்கு எதிராக வெற்றிகரமாக விளையாடியுள்ள சுனில் கவாஸ்கரே தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதி நாட்களில் துவக்க வீரராக களமிறங்க மறுத்து 4ம் நிலையில் களமிறங்கினார்.

உலகின் ஆக்ரோஷமான துவக்க பந்து வீச்சுகளை சந்தித்த மற்றொரு வீரர் ஜெஃப் பாய்காட், அவரும் துவக்க ஆட்டம் பற்றி கூறுகையில், மிகவும் கடினமான விஷயம், ஏனெனில் பந்து வீச்சாளர்கள், ஃபீல்டர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், அவர்கள் சிந்தனையும் தெளிவாக இருக்கும், அப்போது அவர்களை எதிர்த்து விளையாட நிபுணத்துவம் தேவை என்று கூறியுள்ளார்.

இவையெல்லாம் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நமது இன்றைய அணி மேலாளர் லால்சந் ராஜ்புட்டிற்கோ, தேர்வுக் குழு தலைவர் வெங்சர்க்காருக்கோ தெரியாதா என்ன?

அந்த சொற்பமான 5 ரன்களை எடுப்பதற்குள், திராவிடிற்கு ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது, ஒரு கேட்ச் பிடிக்கப்பட்டு அது நோ-பாலாக அமைந்தது.

இதற்கு தினேஷ் கார்த்திக் ஆடியிருக்கலாமே என்று தோன்றுகிறது. யுவ்ராஜ் சிங்கிற்கு இத்தனையாண்டுகளாக வாய்ப்பு இருந்தும் கொடுக்காமல், திடீரென ஆஸ்ட்ரேலிய தொடரில் களமிறக்கியதால் இன்று என்னாயிற்று? அது நாட் அவுட்டாக இருந்தாலும் அந்த பந்தை அடிக்காமல் வெறுமனே பேட்டை நீட்டுவதுதில் போய் முடிந்தது.

உடனடியாக திராவிடை துவக்க ஆட்டக்காரர் பொறுப்பிலிருந்து கீழிறக்கி விரேந்திர சேவாகை களமிறக்கவேன்டும். சேவாக் மீது நம்பிக்கை வைக்கவேண்டும். இல்லையெனில் அவரை ஏன் அழைத்துச் செல்லவேண்டும்.

2 டெஸ்ட்களை தோற்ற பிறகு, கடுமையாக எழும்பும் ஆட்டக்களமான பெர்த் களத்தில் அவரை துவக்கத்தில் இறக்கி அங்கு அவர் தோல்வி அடைந்தால், பார்த்தீர்களா சேவாக் இவ்வளவுதான் என்று எல்லோரையும் கூற வைக்கும் முயற்சி ஏதேனும் அணி நிர்வாகத்திற்கு இருந்தால் அந்த சிந்தனையை மாற்றிக் கொள்வது நல்லது.

தொடர்ந்து திராவிட் துவக்க வீரராக இந்த தொடரில் களமிறங்கினால் மிகக் கேவலாமான 0 - 4 என்ற தொடர் தோல்வியை இந்தியா சந்திக்கும். இது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்