சைமன்ட்சின் சிலிர்க்க வைக்கும் நேர்மை!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (16:42 IST)
பஞ்சாகிப்போன தனது சிட்னி டெஸ்ட் நிறவெறிப் புகார் விசாரணை முடிந்தவுடன், நியூசிலாந்து நீதிபதி, சைமன்ட்ஸ்தான் ஹர்பஜனை தூண்டினார் என்று கூறியதும், அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது நடத்தையை சரிசெய்து கொள்ளுமாறும் கூறியதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய பெரும்புள்ளி சைமன்ட்ஸ் "எனது நேர்மையை ஒவ்வொரு முறை சந்தேகிக்கும் போதும் ரத்தம் கொதிக்கிறது" என்று பத்திரிக்கைகளில் ஆவேசப்பட்டார்.

webdunia photoFILE
அவ்வாறு ரத்தம் கொதித்துப் போன நேர்மையாளரான சைமன்ட்ஸ் சற்றுமுன் இலங்கை அணிக்கு எதிராக பெர்த் ஒரு நாள் போட்டியில் செய்த காரியம் பார்ப்போர் ரத்தத்தையல்லாவா கொதிப்படையச் செய்துவிட்டது.

237 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவரும் இலங்கை 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து போராடிக் கொண்டிருக்கிறது. அப்போது இலங்கை வீரர் எல்.பி.சி. சில்வா ஆட்டத்தின் 14ஆவது ஓவரை எதிர்கொள்கிறார். நேதன் பிராக்கன் வீசுகிறார். ஓவரின் கடைசி பந்து நேதன் பிராக்கன் வீசிய பந்தை கவர் திசையில் அடிக்கிறார் சில்வா, பந்து சைமன்ட்சின் இடது கைப்பக்கம் தாழ்வாக செல்கிறது. ஒரு அபாரமான டைவ் அடித்த சைமன்ட்ஸ் பந்தை பிடித்து நன்றாக தரையில் வைத்து அமுக்குகிறார். ஆனால் உடனேயே அவரது 'ரத்தத்தில் இருக்கும் நேர்மை' மறைய கேட்ச் பிடித்துவிட்டதாக தாவிக் குதிக்க, மற்ற ஆஸ்ட்ரேலிய வீரர்களும் அவருடன் சேர்ந்து கும்மி அடிக்கின்றனர்.

சந்தேகத்துடன் சற்று நேரம் கிரீசில் நின்ற சில்வா, உலகின் "தலைசிறந்த நடுவர்" டேரல் ஹார்ப்பர் ரொம்பத் தெரிந்தவர் போல் அது அவுட்டுதான் என்று கையை உயர்த்துகிறார். சில்வா பரிதாபமாக வெளியேறுகிறார்.

பந்து தரையில் வைத்து பிடிக்கப்பட்டதை பேட்டிங் முனையில் சில்வா பார்த்திருக்கிறார் என்றால், நேர்மைத் திலகம் கில்கிறிஸ்ட் உள்ளிட்ட ஸ்லிப்பில் உள்ள மற்ற நேர்மைத் திலகங்களான பாண்டிங், கிளார்க் ஆகியோரும் பார்க்கின்றனர். ஆனால் உடனே அது சைமன்ட்சின் அபார கேட்சாக மாறிவிடுகிறது, சிட்னியில் படு அசிங்கமாக குதித்தது போல் மீண்டும் ஒரு குதியல் போடுகின்றனர்.

கிரிக்கெட் ஆட்ட உணர்வு என்பது என்ன? தெரிந்தே நாம் ஒரு முறை தவறுதலைச் செய்யக்கூடாது என்பதுதானே. கேட்சை பிடிக்காவிட்டால் அதை பிடிக்கவில்லை என்று கூறுவதுதான் ஆட்ட உணர்வு. சரி! ஆஸ்ட்ரேலியாவின் இது போன்ற "போங்கு"கள் உலகம் அறிந்ததுதான். நடுவர் எதற்கு இருக்கிறார்? டேரல் ஹார்ப்பர் 3வது நடுவரை அழைத்திருக்க வேண்டியதுதானே? அவரும் என்ன செய்வார் பாவம், அவரும் ஒரு ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் நேர்மைத் திலகம்தானே!

சிட்னிக்கு பிறகு மாறிவிட்டோம் ஆச்சா.. போச்சா என்று கிரிக்கெட் ரசிகர்களை ஆஸ்ட்ரேலிய வீரர்கள் நம்பவைத்தனர். ஆனால் இன்னமும் அழுகுணி மனப்பான்மை மாறவில்லை என்பதையே சைமன்ட்ஸ் இன்று பிடித்த... இல்லை... பிடிக்காத கேட்ச் எடுத்துரைக்கிறது.

நேர்மையை சந்தேகித்தால் ரத்தம் கொதிக்குமாம்! கள்வனின் ரத்தம் ஒருநாளும் கொதிக்காது!