ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!

திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (12:43 IST)
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் சுறுசுறுப்பாக விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெல்ப்ஸ் போன்றவர்களின் உலக சாதனைகளை தொலைக்காட்சியில் மக்கள் ரசித்து வியந்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்கள் என்று ஒரு தமாஷ் வகையறா கிரிக்கெட் ‘சீரியசா’ ஆடப்பட்டு வருகிறது.

இதில் என்ன தமாஷ் இருக்கிறது என்று கேட்கலாம்! இரு அணிகளும் மாறி மாறி தோற்று ஒரு தமாஷை நடத்தி வருகின்றனர்.

webdunia photoFILE
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இளம் சிங்கங்கள், அஜந்தா மென்டிஸ் என்ற புரியாத புதிரிடம் வீழ்ந்தனர். ஆனால் உடனடியாக இலங்கையுடன் டெஸ்ட் போட்டி வருகிறது என்றவுடன், திராவிட் வந்திருக்காஹ, கங்கூலி வந்திருக்காஹ, லக்ஷ்மண் வந்திருக்காஹ மற்றும் நம் உலக நாயகன் சச்சின் வந்திருக்காஹ என்ற வடிவேல் ரக பீடிகையுடன் இலங்கைக்கு வந்திறங்கினர்.

முதல் டெஸ்டில் மீண்டும் முரளிதரன், அஜந்த மென்டிஸ் கூட்டணி நம் மாயண்ணங்களை கவிழ்த்தனர். 4ஆம் நாளிலேயே இரண்டாவது இன்னிங்சில் 136 ரன்களுக்கு சுருண்டனர்.

இரண்டாவது டெஸ்ட், இம்முறை தமாஷ் செய்தது இலங்கை. சேவாக் - உலகத்தரம் வாய்ந்த பெரும் தலைகள் இதுவரை ஆட முடியாத - ஒரு இன்னிங்சை ஆட, இலங்கை ஹர்பஜனிடமும், இஷாந்த் ஷர்மாவிடமும் வீழ்ந்தது. என்ன சச்சின், திராவிட், கங்கூலி போன்றவர்களை வைத்துக் கொண்டு உங்களால் மட்டும்தான் கேவலமாக தோற்க முடியுமா, அதுபோன்ற பெரிய தலைகள் இல்லாமலே எங்களாலும் கேவலமாக தோற்க முடியும் என்பதை நிரூபித்து மகேலா ஜெயவர்தனே தமாஷ் செய்தார்.

webdunia photoFILE
3-வது டெஸ்ட் சேவாக் விரைவில் பெவிலியன் திரும்ப, நடுவர் மறு பரீசிலனை முறை என்ற தமாஷ் அதன் உச்சத்தில் நடைபெற இந்தியா இம்முறை கேவலமாக தோற்பதில் தங்களை அடித்துக் கொள்ள உலகில் யாரும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதில் குறிப்பாக உலக நாயகன் சச்சின், 3 முறை மட்டையை கொண்டு வராமல் கால் காப்பில் வாங்கி மூன்று முறையும் நடுவர் மறுபரிசீலனையில் அதிர்ஷ்டவசமாக எல்.பி.டபிள்யூ ஆகாமல் தப்பினார்!

ஆனால் சச்சின் தப்புக் கணக்கு போட்டார். 3 முறை இலங்கை வேஸ்ட் செய்து விட்டது. இனிமேல் தனக்கு யாரும் அவுட் கொடுக்க முடியாது என்று முடிவெடுத்தார் போலும், 4வது முறையும் நேராக வந்த பந்தை கால் காப்பில் தடுத்தார். ஆனால் பாவம் இம்முறை கள நடுவரே கையை உயர்த்திவிட்டார். சச்சின் அதிர்ச்சி அடைந்தார். நடுவர் மறுபரிசீலனை வாய்ப்புகள் முடிந்து விட்டால் கள நடுவர் அவுட் கொடுக்க முடியாது என்று சச்சின் நினைத்து விட்டார் போலும்!

மீண்டும் காயம்! மீண்டும் தொடரிலிருந்து விலகல்... மீண்டும் வருவார், இந்த மீண்டும் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கப்போகிறது. அதுவரை நம்க்கும் தமாஷுக்கு குறைவில்லாமல்தான் இருக்கப்போகிறது.

சரி டெஸ்ட் தமாஷ் முடிந்ததா? வந்திறங்கின நமது இளம் சிங்கங்கள் ஒரு நாள் போட்டிகளுக்காக. மீண்டும் அஜந்த மென்டிஸ், ஆனால் இவரிடம் விக்கெட் கொடுத்துத்தான் ஆகவேன்டும் என்ற நிர்பந்தம் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டு விட்டது! சரி! குலசேகரா என்ற ஒருவர் அவருக்கே என்ன போடுகிறார் என்று தெரிய வாய்ப்பில்லை, அவரது பந்து வீச்சில் மடிகின்றனர் நம்மவர்கள்.

webdunia photoFILE
முதல் ஒரு நாள் போட்டி மந்தமான ஆட்டக்களத்தில், பார்வையாளர்களே இல்லாத ஒரு விளையாட்டரங்கில், 146 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. இலங்கையும் சோடை போகவில்லை, அணியில் ஒப்புக்கு சப்பாணியாக சேர்க்கப்பட்ட முனாஃப் படேலிடம் விரைவில் இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்து, 146 ரன்கள் நீங்கள் எடுத்தால் என்ன எங்களை சுருட்டலாம், முயன்று பாருங்கள் என்று இலங்கை நினைத்தது, ஆனால் மகேலா ஜெயவர்தனே, கபுகேதரா ஆகியோர் தமாஷை நிறுத்தி வெற்றி பெற்றனர்.

இரண்டாவது ஒரு நாள் போட்டி பரபரப்பாக நடைபெற்றது என்று கூறிக்கொள்ள, அதுவும் மற்றுமொரு கேலிக்கூத்தாக அமைந்தது.

இம்முறை இலங்கை ஒன்றுமில்லாத ஆட்டக்களத்தில் 142 ரன்களுக்கு சுருண்டு, கூறினேன் பார்த்தாயா, முதல் ஒரு நாள் போட்டியில் நீங்கள் நினைத்திருந்தால் எங்களை 146ற்குள் சுருட்டியிருக்கலாம் என்பதை இலங்கை நிரூபித்தது.

அதனால் என்ன 142 என்ன சாதாரண ஸ்கோரா என்று பதிலுக்கு இந்திய வீரர்கள் கேட்டனர். 7 விக்கெட்டுகளை இழந்து படு தமாஷாக வெற்றி பெற்றது. தோனி இந்த தமாஷுக்கு நியாங்களைக் கற்பித்து வருகிறார்.

5 ஒரு நாள் போட்டிகளிலுமே இந்த தமாஷ் நிலை தொடரும் (அதற்குப் பெயர்தானே தொடர் என்பது), வீரர்கள் செய்யும் இதுபோன்ற நகைச்சுவைகளுக்கு இடையே, சர்வதேச நடுவரும் இலங்கை நடுவரும் செய்யும் தமாஷ்கள் அபாரம்! எல்.பி.டபிள்யூ. என்றால் என்னவென்றே தெரியாது போன்று சில தீர்ப்புகளை வழங்கினர்.

கடைசி வரை இதுபோன்ற போட்டிகளை நடத்துவதற்கான நியாயங்களை ஐ.சி.சி.யும் வழங்கப்போவதில்லை. பி.சி.சி.ஐ.-யும் வழங்கப்போவதில்லை. என்ன தமாஷ் வந்தாலும் பையில் பணம் நிரம்பினால் சரி என்று பி.சி.சி.ஐ. நோட்டுகளை கத்தைகத்தையாக எண்ணிக்கொண்டிருக்கிறது. நல்ல கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சாவு மணி அடிக்கப்பட்டு வருகிறது.

webdunia photoFILE
ஓய்வு பெறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மூத்த வீரர்களாயினும், நாட்டிற்காக விளையாட துடிக்கும் இளம் வீரர்களாயினும் தாங்கள் கிரிக்கெட் விளையாட்டின் காவலர்கள் என்பதை மறந்து வருகின்றனர். "நான் இப்போதும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாகவே ஆடி வருகிறேன், இதனால் ஓய்வு பற்றி எனக்கு சிந்திக்க ஏது நேரம்?" என்று மூத்த வீரர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக ஆடி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் அதை சகித்துக் கொள்வதுதான் முறை! இதுதான் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் ஒரே விஷயம்.

ஆனால் ஒரு நாள் அணியில் தோனி கொடுக்கும் வாய்ப்பை இளம் வீரர்கள் ஒழுங்காக தக்கவைத்துக் கொள்ளவேண்டும், இல்லையேல், இந்த மூத்த வீரர்கள் மீண்டும் இதில் தங்கள் கால்களை பதித்து, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தமாஷை கேலிக்கூத்தாகவே மாற்றி விடுவர் என்பது உறுதி.