இந்திய- நியூஸீலாந்து ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடக்கம்

சனி, 27 நவம்பர் 2010 (14:13 IST)
இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை பகல் ஆட்டமாக குவஹாத்தியில் தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அனுபவத்தை நம்பி ஒரு நிலையான அணியை களமிறக்குகிறது என்றால் ஒரு நாள் போட்டியில் இந்தியா சற்றே பரிசோதனை முயற்சி செய்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.

நியூஸீலாந்து அணி அதற்கு நேர்மாறாகச் செயல் படுகிறது. டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து ஒருநாள் தொடருக்கு அனுபவமிக்க வீர்ர்களைக் களமிறக்குகிறது.

உதாரணமாக கைல்மில்ஸ், டேறல் டஃபி, ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேமி ஹவ் போன்ற வீரர்களை ஒருநாள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்கின்றனர்.

இந்திய அணியில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

முரளி விஜய்க்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் நிரூபிக்க மற்றுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் நிறையத் திறமைகள் படைத்த அதிரடி மன்னன் யூசுப் பத்தான் மீண்டும் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு. அவர் உலகக் கோப்பை அணியில் தன்னைத் தேர்வு செய்யுமாறு திறமைகளை வெளிப்படுத்துவது அவசியம்.

இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் போது பின்வரிசையில் ஒரு அதிரடி ஆல்ரவுண்டருக்கான தேவை உள்ளது. அந்த இடத்தை யூசுப் பூர்த்தி செய்யலாம்.

அதனால் அவருக்கு இது ஒரு முக்கியத் தொடராகும். அதே போல் முனாஃப் படேல் இவர் திறமையிருந்தும் அணுகுமுறைக் குறைபாட்டினால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை. இஷாந்த்தின் அணுகுமுறை இவருக்குத் தேவை.

மற்றபடி இவர் ஒரு திறமையான வேகப்பந்து வீச்சாளர் என்பதில் ஐயமில்லை. ஆல்ரவுண்டர் திறமையில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின். இவர் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் வீசும் ஆள்காட்டி விரலால் பந்தைச் சுண்டிவிடும் 'கேரம் பால்' உத்தியைக் கொண்டிருப்பவர். பின்னால் களமிறங்கி அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர். அதனால் இவர் அணியில் இருப்பது அவசியம்.

கர்நாடகாவின் வினய் குமார் தற்போது தேவையே இல்லை. பிரவீண் குமார் இரண்டாவது போட்டிக்கு வந்து விடுகிறார். முதல் போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.

இளம் ஜார்கண்ட் இடது கை அதிரடி வீரர் சௌரப் திவாரி அணியில் உள்ளார் இவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு, ஆனால் இந்த விருத்திமான் சஹா எப்படி அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்பது ஒரு புதிராகவே உள்ளது.

ஒன்று ராபின் உத்தப்பா அல்லது ராயுடு அல்லது தினேஷ் கார்த்திக்தான் தேர்வு செய்யப்பட்டிருக்கவேண்டும். சஹாவின் ஒருநாள் கிரிக்கெட் விரைவு ரன் குவிப்புத் திறமை குறித்து நமக்கு ஐயமாகவெ உள்ளது.

வங்கதேசத்திடம் 0-4 என்று படுதோல்வியடைந்து வந்துள்ள நியூஸீலாந்து அணி நிச்சயம் இழந்த பெயரை மீட்கப் பாடுபடும். இந்திய அணி உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டுள்ளதால் தற்போதைய தொடரை வெல்வது என்பதில் கவனச்சிதைவு ஏற்படும் நிலையில் உள்ளது.

இருப்பினும் கம்பீருக்கு தேசிய அணியை வழி நடத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது அணுகுமுறை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்