ஆஸ்ட்ரேலியாவை கலங்கடித்த இந்திய பேட்டிங்!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (17:50 IST)
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் 3ம் நாள் ஆட்டம் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கும். சச்சின் பேட் செய்த விதமும் அவர் ஹர்பஜனை தன்னுடன் ஆட வைத்த விதமும் இன்றைய தினத்தின் முக்கிய அம்சங்களாகும்.

webdunia photoFILE
அனைத்திற்கும் மேலாக இன்று காலை ஆட்டம் துவங்கியவுடன் கங்கூலி ஆடிய விதம் ஆஸ்ட்ரேலியாவிற்கு பெரிய கவலையளித்திருக்கும். பிரட் லீயின் 2 பந்துகளை ஒரே ஓவரில் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது உருவான தன்னம்பிக்கை இன்றைய தினம் முழுதும் தொடர்ந்தது.

கங்கூலி அனைத்து பந்து வீச்சாளர்களையும் அபாரமாக ஆடியதோடு ரன்களையும் வேகமாக குவிக்கத் துவங்கி 68 பந்துகளில் தன் அரை சதத்தை எட்டினார். அதன் பிறகு பிராட் ஹாகின் பந்தை தூக்கி அடித்து சிக்சராக மாற்றியபோது, ஆஸ்ட்ரேலிய வீரர்களின் முகங்களில் அச்சம் படர்ந்திருந்தது.

ஆனால் அவர் அளவுக்கதிகமாக அடித்து ஆடும் நோக்கத்திலிருந்தாரா என்று தெரியவில்லை. விக்கெட்டைச் சுற்றி வந்து ஹாக் வீசியதால் தன்னைத் தாண்டி பந்து செல்ல வழியில்லை என்று நினைத்தாரோ என்னவோ மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்று விக்கெட்டை விட்டுக் கொடுத்தார்.

யுவ்ராஜ்சிங் சற்றே பதட்டத்டுடன் ஆடியதால் வீழ்ந்தார். மேலும் ஒரு ஓவர் முழுதும் ஷாட்-பிட்ச் பந்துகளை வீசிய பிரட் லீ, அடுத்து அதி வேகமாக நேராக ஒரு பந்தை வீசுவார் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும், சர்வதேச டெஸ்ட் தரத்திற்கு உயர்ந்த ஒரு வீரருக்கு இதை உணர்த்த பயிற்சியாளர் தேவையா என்ன? லீ விரித்த வலையில் விழுந்தார்.

தோனிக்கு கையும் காலும் நகர மறுக்கிறது. துணைக்கண்டத்தில் ஆடும் உத்திகளிலிருந்து அவர் மாறவில்லை, அதனால் ஆட்டமிழந்தார். ஒரு நேரத்தில் 345/7 என்று சச்சின் மட்டுமே ஆடி வந்த நிலையில் இந்தியா 100 ரன்கள் பின் தங்கிவிடும் என்றே தோன்றியது.

webdunia photoFILE
ஹர்பஜன் சிங் களமிறங்கி மட்டையை வீசினார், ஓரிரண்டு பவுண்டரிகளை விளாசினார், ஆனால் ஆட்டமிழந்துவிடுவார் என்றுதான் தோன்றியது. அப்போதுதான் சச்சின் அவரிடம் சென்று பேசினார். அதன் பிறகு நிதானித்த ஹர்பஜன் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்ததோடு விரைவில் ரன்களை குவிக்க துவங்கினார்.

ஹர்பஜன் சிங் 92 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 63 ரன்களை குவித்தது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சின் பலவீனத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கும்.

இவரும் சச்சினும் சேர்ந்து 30 ஓவர்களில் 129 ரன்களை குவித்தது, ஆஸ்ட்ரேலியாவிற்கு அடிக்கப்பட்ட சாவு மணியே என்று தோன்றுகிறது.

webdunia photoFILE
சச்சின் டெண்டுல்கர் தனது ஆக்ரோஷ உந்துதலை கட்டுப்பாட்டுடனும், தந்திரமாகவும் பயன்படுத்தினார், ஆஸ்ட்ரேலிய வீச்சாளர்கள் சோர்ந்திருக்கும்போது பவுண்டரிகளை விளாசினார். மற்ற நேரங்களில் கட்டுப்பாட்டுடன் ஒன்று, இரண்டு என்று ரன்கள் சேர்ப்பதில் நிதானப் போக்கை கடைபிடித்தார். சச்சின் வரலாற்றில் மற்றுமொரு மேதமையான இன்னிங்ஸ் இது. இந்த டெஸ்டை வெற்றி பெறுவதே சச்சின், லக்ஷ்மண் சதங்களுக்கு கிடைக்கும் மரியாதை.

ஆஸ்ட்ரேலிய ஒரு போதும் டிராவிற்கு ஆடமாட்டார்கள். அவர்கள் நாளை முதல் 2 மணி நேரத்தில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல், பிறகு அடித்து ஆட முற்படலாம். ஆனால் கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோரின் ஆக்ரோஷம் அதற்கு வழி கொடுக்குமா என்று தெரியவில்லை.

ஆனால் முதல் இன்னிங்சில் அடித்து ஆடியதால் பெற்ற அனுபவங்களை மறந்து கடைசி நாளன்று டிரா செய்யும் எண்ணத்துடன் பேட்ஸ்மென்கள் ஆடினால் அது தென் ஆப்பிரிக்காவில் பெற்ற தோல்வி போல்தான் முடியும். எனவே தங்களது வழக்கமான ஆட்டத்தை ஆடவேண்டும். ஆட்டத்தின் முடிவு குறித்து கவலைபடத் தேவையில்லை.

மேலும் ஆஸ்ட்ரேலியா 16 டெஸ்ட் தொடர் வெற்றி என்ற நெருக்கடியில் விளையாடுவார்கள். எப்போதும் இந்தியாவே அதுபோன்ற கனவுகளை தகர்த்து வந்துள்ளது என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவே நெருக்கடி ஆஸ்ட்ரேலியாவிற்கே.