ஆகவே... தோல்வி தோல்விதானா?

புதன், 9 ஜனவரி 2008 (17:24 IST)
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் சர்ச்சைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. ஆனால் ஒரு தற்காலிக சமரசம் ஏற்பட்டுள்ளது. இது மீண்டும் வெடிக்குமா இல்லையா என்பதெல்லாம் போகபோகத் தெரியும்.

நடுவர்களின் மோசடிதான் முதலில் பெரிய விஷயமாக அலசப்பட்டது. போட்டி முடிந்தவுடன் அனைத்து தொலைக்காட்சிகளும் நடுவர்களின் மோசடிகளை திரும்பத் திரும்ப காட்டி வந்தன. எவ்வளவு இழிவான வெற்றியை ஆஸ்ட்ரேலிய பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் ஆட்டம் முடிந்து இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ஹர்பஜன் சிங்கை ஐ.சி.சி. 3 போட்டிகளுக்கு தடை செய்தது எல்லா ஊடகங்களிலும் அதீதமான கவன ஈர்ப்பு பெற்றது. ஹர்பனஜனுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் போராடி வெற்றியும் பெற்றது.

மோசமாக செயல்பட்ட ஸ்டீவ் பக்னரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையிலும் இந்திய அணி நிர்வாகம் வெற்றி பெற்றது. ஆனால்... சிட்னி டெஸ்டில் மோசடியாக தோற்கடிக்கப்பட்டதன் விதி அவ்வளவுதானா? இதுவே நம் கேள்வி.

ஹர்பஜன் விவகாரம் ஒரு திசை திருப்பலா?

நன்றாக யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் மங்கலாக புலப்படுகிறது, வேண்டுமென்றே ஹர்பஜன் விவகாரத்தை பெரிதுபடுத்தி, போட்டியை வென்ற விதத்தை சர்ச்சைக்குள்ளாகாமல் செய்ய ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் கையாண்ட உத்திதானோ அது என்ற சந்தேகம் எழுகிறது.

சிட்னி கிரிக்கெட் டெஸ்டை நாங்கள் ஏற்கமாட்டோம், அந்த போட்டி செல்லாத போட்டி என்று அறிவிக்கப்பட வேண்டும். இல்லையேல் பயணம் ரத்து செய்யப்படும் என்ற கோரிக்கை ஏன் முன் வைக்கப்படவில்லை?

ஸ்டீவ் பக்னரை பெர்த் டெஸ்டிலிருந்து நீக்கியது சிட்னியில் அவர் செய்த மோசடிகளுக்கான தண்டனைதான் என்றபோது, அது மோசடியான டெஸ்ட் போட்டி என்றுதானே உறுதியாகிறது, ஆஸ்ட்ரேலியா வெற்றிபெற வைக்கப்பட்டது என்றுதானே அர்த்தம்? பிறகு ஏன் சிட்னி டெஸ்ட் போட்டியை செல்லாது என்ற கோரிக்கையை இந்திய அணி நிர்வாகம் எழுப்பவில்லை?

ஜனவரி 16 ஆம் தேதி எல்லா சமரசங்களும் ஏற்பட்டுவிடும், ஆஸ்ட்ரேலியர்கள் மைதானத்தில் நன்றாக நடந்து கொள்ளத் தொடங்குவார்கள், நடுவரை மாற்றியதால் அவர் மீண்டும் தவறான முடிவுகளை ஆஸ்ட்ரேலியாவிற்கு சாதகாமக அளித்தாலும் வீரர்கள் அதனை "ஸ்போர்ட்டிங் ஸ்பிரிட்" உடன் எடுத்துக் கொள்வார்கள். புயலுக்குப் பின்னே அமைதி! ஆனால் முடிவு மட்டும் ஆஸ்ட்ரேலியா 2 போட்டிகளை வென்றது. தொடரை தோற்கும் வாய்ப்பை இல்லாமல் செய்தது. இந்தியாவிற்கு கிடைத்த ஒரே வெற்றி வாய்ப்பையும் மோசடியாக பறித்தது, குறைந்தது டிரா ஆகவேண்டிய வாய்ப்பையும் கெடுத்தது, ஆகியவை மறக்கப் படவேண்டிய விஷயங்கள்தானா?

தொடர்ந்து 16வது போட்டியை வென்றேயாகவேண்டும் என்ற பிடிவாதத்தில் மைதானத்தில் கண்மண் தெரியாமல் நடந்து கொண்டு, நடுவர்களை விலைபேசி பெற்ற வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் வெற்றியாகவே நீடிக்கத் தக்கதா?

இதே நடுவர்கள் தீர்ப்பு இந்தியாவிற்கு சாதகாமாக அமைந்து சிட்னி டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தால் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் இப்போது கூறுவது போல் "நாங்கள் போட்டியை தீவிரமாக ஆடுகிறோம்" என்று கூறியிருக்குமா அல்லது நடுவர்கள் உதவியுடன் இந்தியா வென்றது என்று கூறுமா? ஸ்டீவ் பக்னரின் கிரிக்கெட் வாழ்வையே இத்துடன் முடிப்பதில் கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்காதா?

மோசடி வரலாறு ஏற்கனவே உள்ளது!

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சூழ்நிலையில் 1981 ஆம் ஆண்டு கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கிந்திய அணி ஆஸ்ட்ரேலிய பயணம் மேற்கொண்டபோது 15 டெஸ்ட்களை தொடர்ந்து வெற்றிபெற்று 16வது தொடர் வெற்றிக்கான எதிர்பார்ப்புடன் சென்றது. சர்வதேச ஒரு நாள் போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி பந்தை தனது இளைய சகோதரர் டிரவர் சாப்பலை தரையோடு உருட்டி விடக் கூறி மோசடி செய்த, இந்திய அணியை 2 ஆண்டு காலம் சீரழிவிற்கு இட்டுச்சென்ற கிரேக் சாப்பல் அப்போது ஆஸ்ட்ரேலிய அணியின் கேப்டன்!

மெல்போர்னில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெறுகிறது. இந்த டெஸ்டில் மேற்கிந்திய அணியின் 5 வீரர்களுக்கு எல்.பி.டபிள்யூ. கொடுக்கப்படுகிறது. ஆஸ்ட்ரேலியாவிற்கு ஒரே ஒரு எல்.பி.டபிள்யூ.தான் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் கூட மோசடிகள் நடந்திருக்கலாம் என்ற ஐயம் அப்போதும் எழுந்தது.

26 ஆண்டுகள் கழித்து ஆஸ்ட்ரேலிய மண்ணில் வந்து அவர்களின் தொடர் வெற்றி சாதனையை இந்தியா நிறுத்தி விடுமோ என்று ஆஸ்ட்ரேலியா அஞ்சியிருக்கிறது. இந்தியா வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தை கடைசியில் டிரா கூட செய்ய விடாமல் கடைசி நாளில் நடுவர்களை வைத்து இந்திய வீரர்களை வீழ்த்தி இழிவான வெற்றியை பெற்றது ஆஸ்ட்ரேலியா.

தற்போது அனைத்தையும் மறந்து பெர்த் டெஸ்டிற்கு நாம் 0- 2 என்ற தோல்வி முகத்துடன் களமிறங்குவது அவசியம்தானா? மோசடிகளால் பெற்ற வெற்றிகளை நிராகரிக்க என்ன வழி?

இந்திய அணி அங்கு வெற்றிபெறும் நோக்கத்துடன் சென்றுள்ளது. அதற்கு ஏற்பட்ட இழிவை பற்றி கவலைப் படாமல், ஏதோ ஆஸ்ட்ரேலிய அணியினரின் நடத்தையை திருத்துவதற்காகவே அங்கு சென்றது போல் அல்லவா இருக்கிறது. பெர்த் முதல் அவர்கள் குறைந்தது இந்தியாவுடன் ஆடும் போது ஒழுங்காக நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால் நடுவர் மோசடியால் அடைந்த தோல்வி... ஆஸ்ட்ரேலிய அணியின் மோசடி வெற்றியை காப்பாற்றி விட்டது சர்வதேச கிரிக்கெட் பேரவை. ஆனால் இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சத்தில் ஒரு வடுவாகவே நீடிக்கப் போகிறது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் பொறுப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்