இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நியூஸீலாந்தை எதிர்த்து இந்தியா வெற்றி பெற்ற போட்டியில் நடுவர் தீர்ப்பை ஏற்காமல் சற்றே எதிர்ப்பு காட்டியதற்காக இந்திய வீரர் விராட் கோலிக்கு அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் விதித்துள்ளார் ஐ.சி.சி. ஆட்ட நடுவர் ஆலன் ஹர்ஸ்ட்.
நேற்றைய ஆட்டத்தின் 6வது ஓவரில் கோலி ஒரு பந்தை ஆட முயன்றபோது அது மட்டையில் பட்டுச் சென்றதாக நியூஸீலாந்து வீரர்கள் உறுதியாக முறையீடு எழுப்ப அதற்கு உடனடியாக சந்தேகமின்றி கையை உயர்த்தினார் இலங்கை நடுவர் அசோகா டி-சில்வா.
இந்தத் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்த விராட் கோலி, அங்கு சற்று நேரம் நின்றபடியே சில வார்த்தைகளை தனக்குள் முணுமுணுத்தார்.
இதைத்தான் தற்போது ஐ.சி.சி. விதி மீறல் என்று கூறி அபராதம் விதித்துள்ளது.
இதில் என்ன பிரச்சனையெனில் கோலி செய்தது எதிர்ப்புதான் என்பதை உறுதி செய்தது யார் என்பதுதான்.
கள நடுவர்களான ஆசாத் ராஃப்! இவருக்கும் இந்த அவுட்டிற்கும் தொடர்பில்லை, அதனால் அசோக டி-சில்வா கூறுவதற்கு இசைய வேண்டிய நடுவராக இவரது பணியாகப் போய்விட்டது. மற்ற 3 பேர் யார் யார் என்று பார்த்தால், கள நடுவர் அசோக-டி-சில்வா, இலங்கைக்கு எதிரான போட்டியில் 4-இல் 3 அவுட்களுக்கு மோசடி தீர்ப்பு வழங்கிய குமார் தர்மசேனா, 4-வதாக உள்ளவர் லியானாகே என்ற இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி. இவர்கள்தான் கோலி காட்டியது எதிர்ப்பே என்று வியாக்யானம் அளித்து தண்டனை பெற்றுத் தந்ததுள்ளனர்.
மைதானத்தில் கோலி வெறுப்பில் சிறிது நேரம் நின்றது நடுவர் தீர்ப்பிற்கான எதிர்ப்பு என்று எப்படி விளக்கமளிக்கிறார்கள்? அவர் தன்னையே நொந்து கொண்டு நின்றிருக்கலாம் அல்லது கிடைத்த வாய்ப்பு பறிபோய்விட்டதே என்ற வருத்தத்தில் நின்றிருக்கலாம். அவர் மட்டையில் படவில்லை என்றோ, அல்லது நடுவரிடம் இது பற்றி பேசினாலோ, அல்லது மைதானத்தில் நின்று கொண்டே அது அவுட் இல்லை என்பது போன்ற உடலசைவுகளையோ செய்ததால்தான் அது எதிர்ப்பில் அடங்கும். அவர் அதிர்ச்சியடைந்தார், அவ்வளவே.
ஒரு வீரர் அதிர்ச்சியடைந்தால் அதற்கு எதிர்ப்பு என்று கூறி அபராதம் விதிக்கலாகுமா?
சரி! கேள்வியை நாம் வேறு வழியில் கேட்டுப் பார்ப்போம்: நடுவர் அசோக டி-சில்வா தவறான தீர்ப்புகளே வழங்காத சுத்த சுயம்பு நடுவரா? கங்கூலிக்கும் சச்சினும்க்கும் ஏகப்பட்ட தவறான தீர்ப்புகளை வழங்கியவர்தானே அவர்?
அதற்குப் பிறகு இந்தியா கங்கூலி தலைமையில் விளையாடிய போது அசோக டி-சில்வாவை நடுவராக ஏற்றுக் கொண்டதில்லையே!
ஒரு வீரர் செய்தது விதி மீறலா என்று நிர்ணயிக்கும் நபர்களின் பணி வரலாறு என்பது கணக்கிலெடுத்துக் கொள்ளப்படக் கூடாத விஷயமா?
முதலில் வீரர்களின் எந்தெந்த அசைவுகள், பார்வைகள், செய்கைகள் ஐ.சி.சி. விதிகளில் எதிர்ப்பு, மீறல் என்று கறாராக வரையரை செய்யப்பட்டுள்ளதா?
நேற்று அங்கிருக்கும் இலங்கை நடுவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒரு செய்கையை எதிர்ப்பு என்று கூறினால் அது முடிந்த முடிவாகிவிடுமா?